ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை - மதிமுக மாவட்ட செயலாளர் கைது
காஞ்சிபுரம்,ஆக.27:
காஞ்சிபுரத்தில் பணி ஓய்வு பெற்ற பெண்காவல் ஆய்வாளரை கொலை செய்தது தொடர்பான வழக்கில் செவ்வாய்க்கிழமை மதிமுக மாவட்ட செயலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் வசித்து வந்த ராஜேந்திர பாபு மனைவி கஸ்தூரி(62)இவர் காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி கடந்த 2020 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் இம்மாதம் 22 ஆம் தேதி வியாழக்கிழமை அவரது வீட்டில் தலைகுப்புற விழுந்து இறந்து கிடந்தார்.இச்சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி காவல் நிலையத்தினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் காஞ்சிபுரம் மதிமுக மாவட்ட செயலாளராக இருந்து வரும் வளையாபதி(65) என்பவரும் அவரது நண்பருமான பிரபுவும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.இந்நிலையில் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து வளையாபதியை சிவகாஞ்சி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையில் தொடர்புடைய மற்றொரு நபரான தலைமறைவாகவுள்ள பிரபுவையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பணி ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரான கஸ்தூரி தனது வீட்டை விற்பனை செய்வது தொடர்பான வாக்குவாதத்தில் இருவரும் கஸ்தூரியை கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


No comments
Thank you for your comments