தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வு கூட்டம்
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி கூட்டரங்கில் இன்று (22.08.2024) தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் எம். வெங்கடேசன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில், ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி, ஆவடி காவல் துணை கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் ஆகியோர் முன்னிலையில் ஆவடி சரஸ்வதி நகரில் கழிவுநீர் தூய்மைப்படுத்தும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த கோபிநாத் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜே பி எஸ்டேட் சரஸ்வதி நகரில் 10 .08 .2024 அன்று கழிவு நீர் குழாயினை தூய்மை பணி மேற்கொள்ளும் பொழுது விஷவாயு தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் கோபிநாத் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிவாரணத் தொகையும் அவர்கள் உயிரிழந்த மறு தினமே வழங்கப்பட்டு விட்டது என்பது சந்தோஷமான விஷயம். ஆனால் மனித இழப்பு என்பது ஈடு செய்யாத ஒன்றாகும்.

மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் நிவாரண தொகை மட்டுமல்லாமல் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி இருக்கிறது. தூய்மை பணியாளர்கள் தூய்மைப்பணி மேற்கொள்ளும் பொழுது அதற்கான உடை, கையுறை, மாஸ்க் வழங்க வேண்டும் . பொதுவாக கழிவு நீர் அகற்றுவது போன்ற பணியினை மனிதனைக் கொண்டு செயல்படுத்தாமல் இயந்திரங்களைக் கொண்டு தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும்.
கழிவுநீர் குழாயினை தூய்மை பணி மேற்கொள்வது குறித்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினால் இதுபோன்ற பணிகளுக்கு செல்ல மாட்டார்கள் என தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் எம். வெங்கடேசன் தெரிவித்தார்.
முன்னதாக தூய்மை பணியாளர் கோபிநாத் தூய்மைப்பணி மேற்கொள்ளும் பொழுது விஷவாயு தாக்கி உயிரிழந்த இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் உயிரிழந்த கோபிநாத் அவர்களின் குடும்பத்தினரிடம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டு அறிந்தார்கள்.
பின்னர் தூய்மை பணியாளர்களிடம் ஆலோசனையின் போது தூய்மை பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம், மாதம் எவ்வளவு வழங்கப்படுகிறது, வருங்கால வைப்பு நிதி, பணியாளர்களின் காப்பீடு முறையாக தனியார் நிறுவனம் பின்பற்ற படுகிறதா, கால நேரம், உடை, கையுறை, சோப்பு வழங்கப்படுகிறதா என்றும் கழிவு நீர் குழாயினை அகற்றும் பணிக்கு யாராவது நிர்பந்தம் செய்கிறார்களா என்று தூய்மை பணியாளர்களிடம் ஆலோசனை கூட்டத்தில் விவாதித்தர்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வராணி, தாட்கோ மேலாளர் இந்திரா, ஆவடி வட்டாட்சியர் சசிகலா, தூய்மை பணியாளர் உறுப்பினர் ஹாரிஸ் மற்றும் அரசு அலுவலர்கள் , தனியார் நிறுவனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments