ஆடிக்கிருத்திகை : குமரகோட்டம் முருகன் கோயிலில் காவடி எடுத்து வந்த பக்தர்கள்
காஞ்சிபுரம், ஜூலை 28:
ஆடிக்கிருத்திகைக்கு திருநாளுக்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் பரணிக்காவடி எடுத்து வந்து சுவாமியை தரிசித்தனர்.
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்கது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
ஆடிக்கிருத்திகை திருவிழா திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை பரணி நட்சத்திரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் பரணிக்காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமான தரிசித்தனர்.மூலவர் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சியளித்தார்.
ஆடிக்கிருத்திகை திருவிழா ஏற்பாடுகள் குறித்து கோயிலின் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவர குருக்கள் கூறியது.
ஆடிக்கிருத்திகை திருநாளான திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் உள்ள கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்தில் உற்சவர் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
அங்கு பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இரவு ஆலயத்தின் உட்பிறகாரத்தில் வள்ளி,தெய்வானை சமேதராக உற்சவர் முத்துக்குமாரசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இதன் பின்னரும் மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறுகிறது.
பக்தர்கள் ஆலய நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு நல்கி சுவாமியை தரிசித்து பயன் பெறுமாறும் கே.ஆர்.காமேசுவர குருக்கள் கேட்டுக் கொண்டார்.பேட்டியின் போது ஆலய அர்ச்சகர் சந்திரமௌலியும் உடன் இருந்தார்.
No comments
Thank you for your comments