Breaking News

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா

கோவை: 

கோவை திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் இன்று (ஜூலை 3) வழங்கினார்.



கோவை மாநகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார். கோவையின் முதல் பெண் மேயராக திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார். கல்பனா கோவை மேயராக பதவியேற்று முதலே பல்வேறு சலசலப்புகள் கட்சியினர் மத்தியில் நிலவி வந்தது. 

மேலும், பதவியேற்ற சமயத்தில், இவருடைய தம்பி, குடியிருக்கும் வளாகத்தில் வசிப்பவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், மேயர் கல்பனா இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தனது தம்பிக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதேபோல், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கல்பனாவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திமுகவுக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக, கல்பனா மீது கட்சி தலைமைக்கு நிறைய புகார்கள் சென்றதாகவும், அதுகுறித்து விசாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், கோவை மேயர் கல்பனாவிடம் மாமன்ற கூட்டங்களில் திமுக கவுன்சிலர்களே வாக்குவாதத்தில் ஈடுபடுவர். அதேபோல, டெண்டர் ஒதுக்கீடு உள்ளிட்ட நிர்வாக ரீதியாகவும், மேயர் கல்பனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே, கோவை மேயர் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி வந்தது. மேலும், இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து திமுக தலைமை அறிவாலயம் அழைத்து விசாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை வேறு ஒரு நபர் மூலம் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் இன்று கொடுத்துள்ளார்.

No comments

Thank you for your comments