Breaking News

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா

காஞ்சிபுரம், ஜூலை 29:

ஆடிக்கிருத்திகை திருநாளையொட்டி திங்கள்கிழமை காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பால்க்காவடி,பூக்காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.


படவிளக்கம்: ஆடிக்கிருத்திகையையொட்டி மயில்க்காவடி எடுத்து வந்த சௌராஷ்டிர சமூகத்தை சேர்ந்த பாலமுருகன் குழுவினர்

கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். 

இக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருநாளையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.கூட்ட நெரிசலை தவிர்க்கவும்,பக்தர்களின் வசதிக்காகவும் உற்சவர் முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

சின்னக் காஞ்சிபுரம் சௌராஷ்டிர சமூகத்தை சேர்ந்த ஸ்ரீ பாலமுருகன் குழுவினர் 146 பேர் சங்கர் தலைமையில் 90 வது ஆண்டாக மயில்க்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

பக்தர்களில் பலரும் பால்க்காவடி,பூக்காவடி ஆகியனவற்றையும் சின்னக்காஞ்சிபுரம் திரௌபதி அம்மன் ஆலயத்திலிருந்து பாதயாத்திரையாக குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களில் சிலர் கன்னங்களில் வேல் குத்தியவாறு சுவாமி தரிசனம் சய்ய வந்திருந்தனர்.இரவு கோயில் உட்பிரகாரத்தில் வள்ளி,தெய்வானையுடன் உற்சவர் முத்துக்குமாரசுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோயில் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவர குருக்கள் தலைமையில் சிறப்பு பாலாபிஷேகமும் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கதிரவன் தலைமையில் கோயில் பூஜகர்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments