Breaking News

பழங்கால ஓலைச்சுவடிகளில் பல தத்துவ சாஸ்திரங்கள் நிரம்பியிருக்கின்றன.காஞ்சி சங்கராசாரியார் பேச்சு

காஞ்சிபுரம் :

பழங்கால ஓலைச்சுவடிகளில் பல தத்துவ சாஸ்திரங்கள் நிரம்பியிருப்பதாக காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை பேசினார்.



காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்துக்கு காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகள் எழுந்தருளி அங்கிருந்த பக்தர்களிடையே பேசியதாவது.

காஞ்சிபுரத்தில் ஏராளமான கோசாலைகள், வேதபாடசாலைகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்கள் ஆகியன நிரம்பியிருக்கின்றன.

இவற்றை வெளிநாடுகளில் உள்ளவர்களும் வந்து பார்த்து அந்தந்த நாடுகளிலும் உருவாக்கப்பட வேண்டும்.காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் கிராமத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் உருவாக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் கண்காட்சி உள்ளது. 

அந்த ஓலைச்சுவடிகளில் பல தத்துவ சாஸ்திரங்கள் நிரம்பியிருக்கின்றன.நமது முன்னோர்கள் பனை ஒலையில் ஆணியை வைத்து ஆணித்தரமாக பல கருத்துக்களை அதில் எழுதி வைத்திருக்கிறார்கள். அவை பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.அவற்றை நாம் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

தர்மம்,சேவை,சரித்திரம் இவை மூன்றுக்கும் காஞ்சிபுரம் அடித்தளமிட்டும்,வளர்ந்தும் வருகிறது.மனிதப்பிறவி பயனுள்ளதாக மாற நாம் நமது சம்பிரதாயங்களை காப்பாற்ற வேண்டும்.எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன. நல்ல எண்ணங்களை உருவாக்குவதே சிறந்த தர்மம் என்றும் பேசினார்.

ஓரிக்கை மணிமண்டபத்திலிருந்து அவரது அருளாசியுரை அமெரிக்காவில் நியு ஜெர்சியில் உள்ள மகா பெரியவர் மணி மண்டப முதலாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நேரடியாக காணொலிக்காட்சி வாயிலாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.

ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,ஸ்ரீ காரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி,ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

சங்கராசாரியார் மணிமண்டபத்துக்கு எழுந்தருளியதையொட்டி மணி மண்டப வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 

No comments

Thank you for your comments