காஞ்சிபுரம் ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் காஞ்சி சங்கராசாரியார் சிறப்பு வழிபாடு
காஞ்சிபுரம், ஜூன் 13:
காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை மாலையில் ஆலயத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடத்தினார்.
படவிளக்கம்: காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலுக்கு எழுந்தருளிய காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி எனப்படும் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை யொட்டி ஆலயம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது.கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரமும் அமைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இம்மாதம் 7 ஆம் தேதி தொடங்கியது.இதன் தொடர்ச்சியாக மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவில் திருவண்ணாமலை ஸ்ரீ ஆதி சிவாங்காச்சாரிய சுவாமிகள் ஆதீன மடத்தின் 65 வது பீடாதிபதி சிவராஜ ஞானச்சார்ய குரு சுவாமிகள் பங்கேற்றார்.
மாலையில் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆலயத்துக்கு எழுந்தருளினார். மூலவர் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கருவறைக்குள் சென்று சிறப்பு தீபாராதனைகளும் நடத்தினார். முன்னதாக கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் பெ.எழுமலை என்ற ரவி தலைமையில் அறங்காவலர்கள், கோயில் செயல் அலுவலர் ஜெ.ப.பூவழகி தலைமையில் கோயில் பணியாளர்கள், ஆலய அர்ச்சகர்கள் மற்றும் விஸ்வகர்ம சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உட்பட பலரும் காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகளை பூரண கும்ப மரியாதையுடன் மங்கல மேள வாத்தியங்களுடன் ஆலயத்துக்கு அழைத்து சென்றனர். ஆலயத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகிகளுக்கும் காஞ்சி சுவாமிகள் அருளாசியும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து உற்சவர் ஆதிபீடா பரமேசுவரி காளிகாமாள் சிம்ம வாகனத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் விதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
No comments
Thank you for your comments