நாளை முதல் 547 ஆம்னி பேருந்துகளுக்கு தமிழகத்தில் இயக்க தடை - போக்குவரத்துத் துறை அதிரடி...
சென்னை:
நாளை இரவு 12 மணி முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழ்நாடு அனுமதிச் சீட்டும் பெறாமல் தமிழகத்தில் இயங்கி வரும் ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட ஆம்னி பேருந்துகளை நாளை முதல் இயக்குவதற்கு தடை விதித்திருந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எடுக்கப்படாததால், நாளை (ஜூன் 14ஆம் தேதி இரவு 12 மணி) முதல் பேருந்துகளை இயக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையின் காரணமாக, வெளியூர் செல்வதற்கு பதிவு செய்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது. மத்திய அரசு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுலாப் பயணிகளுக்காக ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக அனுமதி வழங்குகிறது.
அந்த வகையில், பல்வேறு வெளி மாநிலங்களில் பதிவு எண்கள் கொண்ட 647 ஆம்னிப் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வந்தன. அதனை மாற்றி தமிழ்நாடு மாநில பதிவு எண் பெற வேண்டும் என சாலை பாேக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், 105 பேருந்துகள் தங்களின் பதிவு எண்ணை தமிழ்நாட்டிற்கு மாற்றியது.
மேலும், 547 ஆம்னி பேருந்துகள் தங்களின் பதிவு எண்களை தமிழ்நாட்டிற்கு மாற்றாமலும், சுற்றுலா நோக்கத்தில் இயக்காமல், முழுக்க முழுக்க பயணிகள் போக்குவரத்திற்காக அந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
உடனடியாக, இதுபோன்ற செயலை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியும், தொடர்ந்து அவர்கள் போக்குவரத்துக்காக சுற்றுலா ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு கொடுத்த கால அவகாசம் ஜூன் 14ஆம் தேதி இரவு 12 மணியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
2 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படாது எனவும், வெளிமாநில பதிவுகள் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளும் நாளை முதல் இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்துத்துறை ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்ததாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்வதற்கு 20 ஆயிரம் பயணிகள் பதிவு செய்துள்ளனர் எனவும், அவர்கள் வெளியூர் செல்வதில் சிரமம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர். இதனால் 547 ஆம்னி பேருந்துகள் நாளை முதல் தமிழகத்தில் இயங்காது. மீறி இயக்கப்பட்டால் அவை போக்குவரத்து துறை சார்பில் பறிமுதல் செய்யப்படும் என்பதும், அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு போக்குவரத்து துறையின் அறிவிப்பு: இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 88(9) ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (c) வழங்க அதிகாரம் அளிக்கிறது.
இந்த அனுமதிச் சீட்டு குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக மட்டுமே (அதாவது சுற்றுலாப் பயணிகள் யாத்திரை, திருமணம், சுற்றுலா பார்வையிடுதல் போன்ற காரணங்களுக்காக) வழங்கப்படுகிறது. ஆனால் மேற்கூறிய காரணங்களுக்கு அல்லாமல் இந்த சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களும் விதிகளை மீறி இயக்கப்படுவதாக பெறப்பட்ட சமீபத்திய புகார்களின் அடிப்படையில், காரணங்களை ஆராய்ந்ததில்,அனுமதி பெற்ற வாகனங்கள் பெரும்பாலும் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டு செயல்படாமல் வேறுவகையில், செயல்படுகின்றன என்று தெரிய வருகிறது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில்,ஒப்பந்தத்தின்படி சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லாமல் பல இடங்களில் பயணிகளை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஏற்றி, இறக்கி அல்லது தமிழ்நாட்டிற்குள் ஏற்றி, இறக்கி பயணிகள் பேருந்துகள் போல் இயக்கப்படுகிறது.
பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ், இ-டிக்கெட் மற்றும் ரெட் பஸ், அபி பஸ் போன்ற பல்வேறு பஸ் டிக்கெட் முன்பதிவு செயலிகள் மூலம் மின்னணு முறையில் டிக்கெட்டுகளை வழங்குவதன் மூலம் தனிநபர்களிடமிருந்து தனித்தனியாக (சுற்றுப்பயண குழு அமைப்பாளரிடமிருந்து அல்ல) கட்டணத்தை வசூலித்தல். ஒரு மாநிலத்திலிருந்து பயணிகளை ஏற்றி சுற்றுலா வாகனம் போல் இயக்காமல் வெவ்வேறு மாநிலத்தில் பல இடங்களில் இறக்கி விடுதல்.
அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் (அனுமதி) விதிகள் 2023 க்கு எதிராக, சுற்றுலாத் திட்டம், ஒப்பந்தத்தின்படியும், பயணிகள் பட்டியலை மின்னணு அல்லது காகித வடிவில் பராமரிக்காமலும் இயக்குதல். ஒப்பந்தத்தின்படி அவர்களின் திட்டமிட்ட பாதை மற்றும் தேதியைப் பின்பற்றாமல் இருப்பது, அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (AITP) நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துதல்.பிற மாநிலங்களில் அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதில் முறையற்ற நடைமுறைகளை பின்பற்றுவது போன்றவை தெரியவந்துள்ளது.
எனவே, அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு வாகனங்களின் இயக்கத்தினை நெறிப்படுத்தும் நோக்கத்தில் இன்று (ஜூன் 13) முதல் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு அரசு இதன் மூலம் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள், சுற்றுலா ஏற்பாட்டர்களுக்கு அறிவுறுத்துகிறது. அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டின் கீழ் இயங்கும் சுற்றுலா வாகனம் எப்பொழுதும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.
அதில் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கான பயண விவரங்கள் மற்றும் இந்தப் பதிவுகள் அதிகார வரம்பிற்குட்பட்ட போக்குவரத்து அதிகாரம், வேறு ஏதேனும் சட்ட அமலாக்க அதிகாரிக்கு தேவைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் மோட்டார் வாகனத் துறை மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள், சிறப்பு சோதனை இடங்களிலும் மீதமுள்ள இடங்களில் காவல் சோதனைச் சாவடிகளில் சுற்றுலாப் பயணிகளின் விவரங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணத்திட்ட விவரங்கள், மற்றும் சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் வழி ஆகிய விவரங்கள் பதிவுச் செய்ய வேண்டும். அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு சுற்றுலா வாகனங்கள் யாராவது மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை மீறினால், சட்டங்கள் மற்றும் விதிகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு உள்ளாகவே விதிகளை மீறி இயக்கப்படுவதை தடுக்கவும், இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை கருத்தில் கொண்டும், விபத்துகள் நிகழும் போது காப்பீடு பெறுவதில் பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டும் இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகம் சார்பில் இவ்வகை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கடந்த நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்டங்களில் கூட்டங்கள் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்வதற்கான காலக்கெடு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால் மொத்தமுள்ள 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே இதுவரை தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து, TN என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழ்நாட்டிற்குள் இயங்குவதற்கு அனுமதி சீட்டும் பெற்றுள்ளனர்.
ஆம்னி பேருந்துகளுக்கு தடை: இறுதி காலக்கெடு மூன்று முறை நீட்டிக்கப்பட்ட பின்னரும் மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி தொடர்ந்து இயங்கி வருவதால் பொதுமக்களுக்கு மேற்கூறியவாறு சிரமம் ஏற்படுவது மட்டும் அல்லாமல் அரசுக்கும் தொடர்ந்து கணிசமான நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இனி உரிய தமிழக பதிவெண் இல்லாமல் தமிழ்நாடு அனுமதிச் சீட்டும் பெறாமல் உள்ள வாகனங்கள் நாளை (ஜூன் 14- வெள்ளி கிழமை) இரவு 12 மணி முதல் இயங்குவதற்கு அனுமதிக்க பட மாட்டாது.
எனவே முறையற்ற வகையில் வெளி மாநிலங்களில் பதிவு செய்து இயங்கும் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மீறி பயணம் செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது என்பது மட்டும் அல்லாமல் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று முறையாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்குரிய சான்றுகளை வாகன தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்”என தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments