Breaking News

தனி ராஜாங்கம் நடத்தும் அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன்! - விசாரணைக்கு முதலமைச்சர் உத்திரவிட கோரிக்கை

சென்னை, ஜூன் 24-

ஆவடி மாநகராட்சியில் பணிபுரிந்து பல ஊழல்களை செய்து அங்கிருந்து வேலூர் மாநகராட்சிக்கு பணி இட மாற்றம் பெற்று அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ஊழல் செய்து பெரும் சாதனை படைத்த சீனிவாசன் என்பவர், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தவுடன் திருச்சியில் உள்ள ஒரு ஒப்பந்ததாரரின் ஆசிர்வாதத்தோடு பல லட்சங்கள் வழங்கி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு உதவியாளராக பணி மாற்றம் பெற்று தற்போது நகராட்சி நிர்வாகத்துறையில் தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. இவருடன் இணைந்து, டிஎம்ஏ அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் இணைந்து கூட்டு ராஜாங்கம் நடத்தி வருகின்றார்.. என்று நகராட்சி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பரவலாகப் பேசபடுகின்றது. இவர்களால் உயர் அதிகாரிகள் பெரும் மன அழுத்தத்தில் தத்தளிப்பதாகவும் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர்.

தகுதியில்லாமல் தந்தையின்  செல்வாக்கில் பணி 

அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன், B.E.-Mechanical and Electrical Engineering படித்தவராம். இவர் தனது தந்தையின் செல்வாக்கில், சிவில் பொறியியல் படித்தவர்கள் பணியாற்றவேண்டிய பணியில், தகுதி இல்லாத இவர் பணம் செலவழித்து 93-94ம் ஆண்டு காலகட்டத்தில் பணியில் சேர்ந்தார். இவர் முறைகேடாக பணியில் சேர்ந்ததை எதிர்த்து பொறியாளர்கள் வழக்கு தொடர்ந்ததே இதற்கு சாட்சி. 

அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன்

தகுதி இல்லாமல் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த இவரது பணி எவ்வாறு சிறக்கும் என்பதை பணியில் சேர்ந்த விதமே காட்டுகின்றது. மக்கள் பணியான அரசு வேலையை, லஞ்சமாக முதலீடு போட்டு லாபம் பார்ப்பதாக நினைத்து அன்று ஆரம்பித்த ஊழல்-லஞ்சம் இன்றளவும் தொடர்கிறது என்பதே நிதர்சனம்... அதற்கு விஜிலென்ஸ் விசாரணையில் உள்ள வழக்கே ஆதாரம்... 

ஆவடி மாநகராட்சி

அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன், ஆவடி மாநகராட்சியில்  2016, 2017, 2018 காலகட்டத்தில் பொறியாளராக பணியாற்றினார். அவருடன் உதவி பொறியாளராக(AE)  நளினி என்பவர் பணியாற்றினார். இவர்கள் இருவரும் கைகோர்த்துக்கொண்டு போடாத சாலை, பராமரிக்காத பூங்கா, மின்விளக்குகள்... போன்ற பல்வேறு பணிகளில் பல கோடி ஊழல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

எம்-புக் எரிப்பு

அதிலும் குறிப்பாக, ஒரே வாரத்தில் ரூ.10 கோடி பில் போட்டு பெரும் அளவு ஊழல் செய்துள்ளனர் என்றும்,  இவைகளை மறைப்பதற்காக சீனிவாசன் மற்றும் நளினி இணைந்து, டிரைவர் ராகவேந்தனை வைத்து சில எம்புக்கை (M-BOOK) எரித்துள்ளதாக கூறப்படுகிறது.  எரிக்கப்பட்ட எம் புக்கு மீது தணிக்கை சுட்டிக் காட்டப்பட்டது.  

இதில் அப்போதைய ஆணையர் பிரேமா பதவி ஓய்வின் போது பொறியாளர் சீனிவாசன் மற்றும்  நளினி ஏஇ இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு பொறுப்புக்கு உள்ளாகின காரணத்தினால் பிரேமா அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதுவே சீனிவாசன் பொறியாளர் மற்றும் நளினி மீது ஊழல் செய்தது உண்மையாகிறது. 

அதுமட்டுமின்றி டிரைவர் ராகவேந்திரன் கொரோனாவால் உயிரிழந்தாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சிலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்... அது கடவுளுக்கே வெளிச்சம்... இந்தநிலையில் டிரைவர் ராகவேந்திரன் மனைவியின் பெயரில் அமைச்சரின் உதவியாளர் சீனிவாசனின் சொத்துக்கள் உள்ளதாக மாநகராட்சி வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது... (இதுகுறித்து உண்மைதன்மை என்வென்று அறிய காலச்சக்கரம் நாளிதழ் புலன்விசாரனை குழு களத்தில் ஆய்வு செய்துவருகிறது..) 

பூங்கா-அடுக்குமாடி முறைகேடு

மேற்கண்ட குற்றச்சாட்டின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு திருமதி லட்சுமி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு துறையில் பூங்கா முறைகேடு, வீஜிஎன் அடுக்குமாடி முறைகேடு மீதும் கோப்புகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலைவில் உள்ளது. 

மத்திய அரசு சேமநல  நிதியில் ஊழல்

சீனிவாசன் ME, நளினி AE இவர்கள் ஆவடி மாநகராட்சியில் பணிபுரிந்த போது பொறியாளர் பிரிவில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகளில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதி வசூலிக்காமல் ஒப்பந்ததாரர்களுக்கு சலுகை செய்து தனக்கு சாதகமாக அந்தத் தொகையை பெற்றுக் கொண்டனர். இதனால் ஆவடி மாநகராட்சி கணக்கு முடக்கம் செய்யப்பட்டதாம். 

ஆவடி மாநகராட்சிக்கு  பெரும் வருவாய் இழப்பு

இதனையடுத்து பொதுமக்கள் செலுத்தியிருந்து வைப்பு தொகயை ஆவடி மாநகராட்சி மூலம் மத்திய அரசுக்கு செலுத்தி உள்ளனர். இதனால் ஆவடி மாநகராட்சிக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். மேற்கண்ட முறைகேடுகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனைத்து விதமான விசாரணைகளும் செய்து, ரூ.4.3 கோடி பொதுமக்களின் பணத்தை இது வரை கட்டாமல் ஊழல் புரிந்துள்ளனர் என்று விசாசணை இறுதி அறிக்கையை நகராட்சி இயக்குனருக்கு அனுப்பி உள்ளனர். இதனால் நளினி மற்றும் பொறியாளர் சீனிவாசன் மீது 17ஏ குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். 

மேலும் 4.3 கோடி பொதுமக்களின் பணத்தை  ஊழல் செய்த சீனிவாசன் மற்றும் நளினி  மீது துறைரீதியான பணி நீக்கம் நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகத்துறை அமைதி காத்தது ஏன்..? பதவி உயர்வுகள் வழங்கியது எப்படி...? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.  

நளினியின் கணவர்

இந்நிலையிலும்,  சீனிவாசன் மற்றும் நளினி அவர்கள் இணைந்து, முறைகேடாக ஒப்பந்ததாரர்களை நியமித்து போடாத சாலைகள் மற்றும் கால்வாய்கள் மின் விளக்குகள் இவற்றிற்க்கு போலி ரசிதுகள் போட்டு பல கோடி ரூபாய் முறைகேடாக ஊழல் செய்துள்ளாக ஆவடி மாநகராட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், தற்போது வரையில் நளினியின் கணவர் மதியழகன் மற்றும் இவருடன் கூட்டு சேர்ந்து பல ஒப்பந்ததாரர்கள் மூலம் போலி பில் போட்டு பல கோடி ரூபாய் முறைகேடாக ஊழல் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.  

பொறியாளர்களின் ரத்த உறவினர்கள் ஒப்பந்ததாரர்களாக பணியாற்றக்கூடாது என்பது விதி. ஆனால்   நகராட்சி நிர்வாகத்துறையின் விதிகளை மீறி நளினியின் கணவர் ஒப்பந்ததாரர்களுடன் தொடர்புகொண்டு ஒப்பந்தங்களில் தனிராஜாங்கம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்களுக்கு சென்று சேரவேண்டிய தரமான பணிகள் தரமற்றதாகவும், மக்களின் வரி பணம் கொள்ளையடிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. 

தலைமை அலுவலகத்தில் நளினி

இவர்கள் இருவரும் சேர்ந்து மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, அரக்கோணம் மற்றும் சில பஞ்சாயத்துகளில் போலி பில் மூலம் பல கோடி ரூபாய் சுருட்டி உள்ளனர்.  இவைகளை மறைக்க அதிகாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்து நளினியை தலைமை அலுவலகத்துக்கு மாற்றம் செய்து மிகவும் பாதுகாப்பாக தனது அரவணைப்பில் தலைமை இடத்தில் அமர வைத்திருக்கின்றார் அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் என்று நகராட்சி நிர்வாகத்துறையில் கிசுகிசுக்கப்படுகிறது. 

வேலூர் மாநகராட்சி - ஸ்மார்ட் சிட்டி திட்டம்

சீனிவாசனை ஆவடி மாநகராட்சியில் இருந்து சிவகாசிக்கு பணி மாற்றம் செய்தனர். அங்கு பெரிதாக பணியாற்ற இயலாததால், அப்போதைய அமைச்சர் வேலுமணியின் தம்பியிடம் நெருக்கம் காட்டி அதிமுகவின் ஆதரவாளர் என்று நம்பிக்கை கூறி பல லட்சங்கள் வழங்கி பணி உயர்வு பெற்று,  வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறிவைத்து கிணிணி ஆக பணி இடமாற்றம் பெற்று வேலூர் மாநகராட்சிக்கு வந்தார். 2019-2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பொறியாளராக சீனிவாசன் பணியாற்றினார்.

ஆவடியைபோன்று இங்கும் திட்டப்பணிகள் முழுமையாக செயல்படுத்தாமல் போலி பில்கள், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என ஏகபோகமாக வலம் வந்தாக கூறப்படுகிறது.

அப்போதைய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000 ஆயிரம் கோடி  பணிகளில் ஒப்பந்ததாரர்களிடம் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக பல கோடி ரூபாய் பெற்றார் என்று வேலூர் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்காக அதிமுக-திமுக என சில அரசியல்வாதிகளிடம் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. 

மேலும், அவருக்கு உடந்தையாக செயல்படும் உதவி பொறியாளர்களையே ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். நெல்லுக்கு பாயும்போது புல்லுக்கு பாய்வதுபோல்.. வந்தது லாபம் என சில உதவிபொறியாளர்கள் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு கோடிகளை சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. 

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மட்டும் கமிஷன், கலெக்ஷன், என சுமார் ரூ-.150 கோடிக்கு மேல் பெற்றுள்ளதாக மாநகராட்சியில் பரவலாக பேசப்படுகிறது. 

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தோல்வி

வேலூரில் சில திட்டப்பணிகள் நடைபெறாமல் எம் புக் கணக்கும் உண்டு...  வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய மூலக்காரணமே தற்போதுள்ள அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன¢ என்ற பேச்சு இன்றும் வேலூர் மாநகராட்சியில் ஒலிக்கின்றது.. என்றால் மிகையாகது... 

அமைச்சரின் உதவியாளராக பணி மாற்றம்

வேலூர் மாநகராட்சியில் வந்த வேலை முடிந்தது என்று டாட்டா காண்பித்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தவுடன் திருச்சியில் உள்ள ஒரு ஒப்பந்ததாரை அணுகி, பல லட்சங்கள் வழங்கி பதவி உயர் பெற்று அவர் ஆசிர்வாதத்துடன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு உதவியாளராக பணி மாற்றம் பெற்று தற்போது நகராட்சி நிர்வாகத்துறையில் தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. 

மாநகராட்சியில் பணியாற்றிய போதோ பல்வேறு முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமைச்சரின் உதவியாளராக அதிகாரமிக்க பணியில் அமர்ந்தவுடன், மேலும் கமிஷன் கலெக்ஷன் என தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகத்துறையில் ரஜாவாக வலம் வருகிறார்... பரமசிவன் கழுத்தில் அமர்ந்த பாம்பாக... படமெடுத்து ஆடுகிறார்...  

இவருடன் இணைந்து, டிஎம்ஏ அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் இணைந்து கூட்டு ராஜாங்கம் நடத்தி வருகின்றார்.. என்று நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பரவலாகப்பேசபடுகின்றது.  இவர்களால் உயர் அதிகாரிகள் பெரும் மன அழுத்தத்தில் தத்தளிப்பதாகவும் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் மீது இயக்குனர் துறைரீதியான நடவடிக்கை எடுப்பார்களா என்பது விடையறியா கேள்வியாக உள்ளது... 

பணி உயர்வு-இடமாற்றம்

தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் பணி மாறுதல்  வேண்டுமென்றால்  அமைச்சர் உதவியாளர் சீனிவாசன் மூலமாக தான் நடைபெறுமாம்...  பணிபுரியும் இடத்திற்கு ஏற்ப பணத்தை வாங்கி கொண்டு பணி மாற்றம் செய்வதாக கூறப்படுகிறது.  அமைச்சருக்கு இவர் கண்கட்டி வித்தை காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இவர் அமைச்சர் பெயரை சொல்லி தனி ராஜாங்கம் நடத்தி வருவது இன்றளவும் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களுக்கு தெரியாது என நம்பிக்கை வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. 

அண்மையில் பணி உயர்வு அறிவிக்கப்பட்டது. அந்த பணி உயர்வில் தகுதியற்றவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பணி உயர்வுக்காக ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் வசூலித்தாக கூறப்படுகிறது. இதில் டிஎம்ஏ தலைமை அலுவலகத்தில் உள்ள ஒருவரும் உறுதுணையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சில அதிகாரிகளை பணி இட மாற்றம் செய்தனர். இதன் பின்னணியில் என்னவென்று விசாரித்தபோது, அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் அவருக்கு வேண்டியவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பணி இடமாற்றம்  செய்வதற்காக, அந்த இடத்தில் இருந்த அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பல லட்சகங்கள் கைமாறியாதாகவும் கூறப்படுகிறது. 

இதில் குறிப்பாக வேலூர் மாநகராட்சி பணம் கொட்டும் இடம் என்பதால், அந்த இடத்தில் அவருக்கு வேண்டிய விசுவாசியாக செயல்படுபவரை பணி இடமாற்றம் செய்வதற்காக ரூ.15 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.  அதற்காக அங்கு பணியாற்றிய இருவரை பணி இடமாற்றம் அறிவித்தனர். 

இவர்களின் சுய லாபத்திற்காக  பணிமாற்றம் செய்து வேலூர் மாநகராட்சியில் அந்த இடத்தை காலியாக செய்து லட்சகணக்கில் பேரம் பேசிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. 

வேகமாக பெருநகரமாக உருவெடுத்துவரும் வேலூர் மாநகராட்சியில் தற்போது  நகர திட்டமிடல் மற்றும் கட்டிட ஆய்வாளர்கள் பணியில் பொறியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால் வேலூர் மாநகராட்சி பணி மேலும் தேக்கம் அடைந்துள்ளது.

ரூ.300 கோடிக்கு அதிகமான சொத்து

கடந்த 10 ஆண்டிகளில் மட்டுமே ரூ.300 கோடிக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக அவர் துறை சார்ந்தவர்களே கூறுகின்றனர்...  இவர் ஊழல் குறித்து முழு ஆதரங்களுடன் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 

விசாரணை வேண்டும்

அரசுக்கு அவப்பெயரையும், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி, மக்கள் வரிபணத்தை முறைகேடாக ஊழல் செய்த இவர் மீது துறைரீயான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக உத்தரவிடவேண்டும். மேலும், தகுதி இல்லாத பணிக்கு சேர்ந்ததால் பணிநீக்கம் செய்து,  இவர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டு ஊழல் முறைகேடால் சம்பாதித்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  


அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன் ஊழல் முறைகேடு, சொத்து விவரம், வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் ஊழல், மேலும் இவருடன் இணைந்து செயலாற்றிய  அமைச்சரின் ஒரு மூத்த உதவியாளர், டிஎம்ஏ தலைமை அலுவலகத்தில் உடந்தையாக பணியாற்றும் உயர் அதிகாரிகள் யார் யார்..? என புள்ளி விவரங்களுடன் தகுந்த உண்மை ஆதாரங்களுடன் விரைவில்... நமது நிருபர் டைரியில்... தொடரும்...










No comments

Thank you for your comments