Breaking News

காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கல்

காஞ்சிபுரம்,மே 2:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்பவர்களுக்கு பூமி அறக்கட்டளை சார்பில் புதன்கிழமை நிழற்குடை இலவசமாக வழங்கப்பட்டது.

படவிளக்கம் : அரசு தலைமை மருத்துவமனை முன்பாக துணி வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிக்கு இலவசமாக நிழற்குடை வழங்கிய பூமி அறக்கட்டளை நிர்வாகிகள்

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பூமி அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் என்.பாக்கியராஜ் தலைமையில் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சனிவாசன், குமார், பிரகாஷ், கார்த்திகேயன் ஆகியோர் சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக நிழற்குடை வழங்கினார்கள்.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் அதிகரித்து வருவதால் சாலையோரங்களில் அமர்ந்து வியாபாரம் செய்யும் ஏழை மக்களின் நிலையை கருத்தில் கொண்டும், மே முதல் தேதி உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் வகையில் பூமி அறக்கட்டளை சார்பில் நிழற்குடை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்,அரசு தலைமை மருத்துவமனை, மீன் சந்தை, ரங்கசாமி குளம், பூக்கடைச் சத்திரம், பழைய ரயில் நிலைய சாலை ஆகிய 6 இடங்களில் சாலையோரம் பூ, பழம், காய்கறி, கரும்புச்சாறு , ரெடிமேட் துணி வகைகள் வியாபாரம் செய்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக நிழற்குடை வழங்கினார்கள்.

சாலையோர வியாபாரிகளும் தக்க நேரத்தில் தக்க உதவி செய்வதாக கூறி அறக்கட்டளையினருக்கு நன்றி தெரிவித்தார்கள்.


No comments

Thank you for your comments