Breaking News

அதிகமான வெப்பநிலை தமிழ்நாட்டில் மஞ்சள் நிற எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை,  ஏப்.29-

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.


இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதியநேரத்தில் தேவையின்றி வெளியே செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதோடு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டத்தில் நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்ப நிலை அளவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நேற்றிலிருந்து மே இரண்டாம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால் அந்த மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் :

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்தி, தருமபுரி, திருத்தணி, வேலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 9 இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் (104டிகிரி) அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்.28-ம் தேதி முதல் மே 1ம் தேதி வரையிலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மே 2 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 3 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.29 ஆம் தேதி முதல் மே 1ம் தேதி வரை,  தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸும், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஏப்.29 முதல் மே 1 வரை, அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நேற்றைய வெயிலின் அளவு 

திருப்பத்தூர் - 106.52, 

தருமபுரி - 106.16, 

வேலூர்-105.98, 

திருத்தணி-105.08, 

கரூர் பரமத்தி-104.36, 

சேலம்-104.18, 

மதுரை விமான நிலையம்-103.28, 

மதுரை நகரம்-102.92, கோவை-102.56, 

திருச்சி -102.38, 

நாமக்கல் - 102.2, 

மீனம்பாக்கம் - 101.48, 

தஞ்சாவூர்- 100.4 

டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.



No comments

Thank you for your comments