Breaking News

விவிபாட் ஒப்புகைச் சீட்டு வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு சரமாரி கேள்வி - தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, ஏப்.25-

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அரசியல் கட்சிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் 18வது மக்களவையை தேர்வு செய்யும் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. 

ஒப்புகைச் சீட்டு

இந்த சூழலில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத் தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களில் விவிபேட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம்.. அந்த வாக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள ஒப்புகைச் சீட்டுகள் பயன்படுகின்றன. இவை 7 வினாடிகள் மட்டும் தெரியும். அதன்பிறகு பெட்டியில் விழுந்து விடும். வாக்கு எண்ணிக்கையின் போது இந்த ஒப்புகைச் சீட்டுகள் முழுமையாக எண்ணப்படுவது இல்லை. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன.

எதிர்க்கட்சிகள்  சந்தேகம்

ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தி வரும் நிலையில், ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  எலக்ட்ரானிக் இயந்திரம் என்பதால் வாக்குகளை வேறு கட்சிகளுக்கு மாற்றி முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்தனர்.

மனு தாக்கல்

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

விசாரணை

இந்த மனு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. 

வாக்குச்சீட்டு முறை

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி வழக்கு விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவாகும் வாக்குகளை தொழில்நுட்பங்களை கொண்டு குறிப்பிட்ட கால அளவில் மாற்றக் கூடியதாக இருப்பதாகவும், மீண்டும் வாக்குச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாக்குச்சீட்டு முறைக்கு அரசு திரும்பிய நிலையில் அதுபோன்ற நடைமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்த கோரி தெரிவித்தார். 

சாத்தியமா?

இதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதிகள் 6 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் கடைபிடிக்கப்படும் வாக்குச் சீட்டு முறை 97 கோடி வாக்காளர்களை கொண்ட இந்தியாவில் சாத்தியமா என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று (ஏப்.24) முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 கேள்வி

ஆனால், இந்த விவகாரத்தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று(நேற்று) பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். 

இதுதொடர்பாக 5 முக்கியமான கேள்வி களையும் உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. 

  • அவை, மைக்ரோ கண்ட்ரோலர் விவிபேடில் பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது கண்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டுள்ளதா?
  • மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • எத்தனை பேலட் யூனிட்களில் சின்னங்கள் பொருத்தப்படும்?
  • தேர்தல் தொடர்பாக 30 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும். எனவே 40 நாட்களுக்குள் தரவுகள் சேமிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் வழக்கு தொடர 45 நாட்கள் அவகாசம் உள்ளது. அப்படியெனில் தரவுகள் சேமித்து வைக்கும் காலத்தை அதிகரிக்க வேண்டுமா?
  • கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைக்கப்படுமா? இதுபற்றி உரிய விளக்கம் தேவை. 

தேர்தல் அதிகாரி ஆஜர்

இதுதொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராவார் என்று மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.

தேர்தல் அதிகாரி விளக்கம்

அதன்படி, பிற்பகல் 2 மணிக்கு அதிகாரிகள் ஆஜராகினர்.  அப்போது உச்ச நீதிமன்ற முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்தனர். 

  • அதில், மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டுமே புரோகிராம் செய்யக் கூடியது.
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கண்ட்ரோல் யூனிட் ஆகிய மூன்றிலும் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர் பொருத்தப்பட்டிருக்கும்.
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
  • தயாரிக்கும் போதே மைக்ரோ கண்ட்ரோலரில் புரோகிராம் பதிவு செய்ய முடியும். அதை மாற்றம் செய்ய முடியாது.
  • சின்னம் பொருத்துவதற்காக சுமார் 4,800 கருவிகள் இருக்கின்றன.
  • 46வது நாளில் உயர் நீதிமன்றத்தை தொடர்பு கொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா? என்பது கேட்டறியப்படும்.
  • தேர்தல் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்ட தகவல் பாதுகாத்து வைக்கப்படும்.

  • வாக்குப்பதிவு முடிந்தவுடன் கண்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபேட் ஆகிய மூன்றுமே சீல் வைக்கப்படும்.
  • வாக்குப்பதிவு இயந்திரத்தில் புராசசர் சிப் பொருத்தப்படுவதை தயாரிப்பு நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பிரசாந்த் பூஷண் வாதம்

இதற்கிடையே, மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதாடுகையில்,

  • “ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யப்படும் சிப் வாக்கு எந்திரத்தில் பொருத்தப்படுவதே சந்தேகத்திற்கு காரணம்.
  • மேலும் மைக்ரோ கண்ட்ரோலரில் ஃபிளாஷ் மெமரியை மீண்டும் புரோகிராம் செய்ய முடியாது என்பது தவறானது.
  • கணினி நிபுணர்களும் மைக்ரோ கண்ட்ரோலர் மீண்டும் புரோகிராம் செய்யக் கூடியதே என்று கூறுகின்றனர்.
ஃபிளாஷ் மெமரி என்பது எப்போதுமே மீண்டும் புரோகிராம் செய்யக் கூடியது” என்றார்.

நீதிபதிகள் உத்தரவு

அப்போது நீதிபதிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள ஃபிளாஷ் மெமரி சின்னங்களை பதிவேற்றம் செய்ய மட்டுமே பயன் படுத்தப்படுவது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டனர். இதையடுத்து இருதரப்பு வாதங்களும் இன்று (நேற்று) நிறைவடைந்தன. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்து விட்டது. 

“தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும். இதுவரை முறைகேடு நடக்கவில்லை. அரசியலமைப்பு சாசனத்தின் அங்கமாகவுள்ள தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரு தரப்பு  வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல்  ஒத்திவைத்துள்ளது. 

தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், உடனடியாக தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அரசியல் கட்சிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

No comments

Thank you for your comments