நாளை மைத்ர முகூர்த்தம்... கடன் தொல்லைகள் தீர்ந்து செல்வம் வளம் பெருக எளிய பரிகாரம்...
கடன், நோய் போன்ற துன்பங்கள் நம்முடைய முற்பிறவி கர்மவினைகளின் பயனாக ஏற்படுகிறது. கடன் பிரச்சனை என்பது அனைவருக்குமே இருக்கும் பெரும் பிரச்சனை ஆகும்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதான் வள்ளுவரின் வாக்கு. இந்த உலகில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழப் பணம் இன்றியமையாத ஒன்று. வருமானம் குறைகிறபோது தேவைக்காக கடன் வாங்குவது இயல்பு. ஆனால், அந்தக் கடன் வெறும் பொருளாதாரச் சுமையாக மட்டும் இல்லாமல் மனதில் நிம்மதியில்லாத சூழலையும் ஏற்படுத்திவிடும். `கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று பாடுவதைக் கேட்டிருக்கிறோம்.
கடன் பட்டுவிட்டால் அதை அடைக்கும்வரை யாருக்கும் நிம்மதியிருக்காது. இப்படி நீண்ட காலமாக இழுபறியாகவே இருக்கும் கடன்களை அடைக்கமுடியாமல் வருந்துகிறவர்களுக்கு ஓர் எளிய பரிகாரம் உண்டு. அதுவே மைத்ர முகூர்த்தம்.
யார் எல்லாம் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும்.
மைத்ர முகூர்த்தம் என்றால் என்ன?
⦿ அசுவினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும், ⦿ அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும் "மைத்ர முகூர்த்தம்" எனப்படுகின்றன.
மேஷ லக்னம் - அசுவினி நட்சத்திரம்
பொதுவாகவே கடனை அடைப்பதற்கு மனம் சார்ந்த சில உந்துதல்கள், முயற்சிகள் தேவை. அசுவினி நட்சத்திரம் என்பது கேதுவுடைய நட்சத்திரம். இதில் மேஷ லக்னம் என்பது செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது. கேது பகவான் ஒரு பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியவர். கடனை அடைக்க, உழைப்பும் முயற்சியும் தேவை. அதற்குச் செவ்வாயின் அனுக்கிரகம் தேவை. எனவேதான் கேதுவுக்கு உரிய நாளில் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ லக்ன காலத்தில் கடனை அடைப்பதன் மூலம் கேது கடன் பிரச்னைகளைக் குறைத்து அருள்புரிவார்.
விருச்சிக லக்னம் - அனுஷ நட்சத்திரம்
அதே போன்று விருச்சிக லக்னமும் செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்த காலம். அனுஷ நட்சத்திரம் சனிபகவானுக்குரியது. சனிபகவான் உழைப்பையும் ஊதியத்தையும் கொடுக்கக்கூடியவர். எனவே, அனுஷ நட்சத்திர நாளில் வரும் செவ்வாயின் பலம் பெற்ற விருச்சிக லக்ன நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக உழைப்பும் நம் முயற்சியும் இணைந்து நமக்கு நவகிரகங்களின் அருளைப் பெற்றுத்தரும் என்பதுதான் இதன் தாத்பர்யம்.
நாளை (ஏப்ரல் 26 ) மைத்ர முகூர்த்தம்
கடன் பிரச்னையிலிருந்து விடுபடவும் செல்வ வளம் சேரவும் உகந்த மைத்ர முகூர்த்தம் நாளை (26.04.2024) வருகிறது.
நாளை (26-04-2024) வெள்ளிக்கிழமை மாலை விருச்சிக லக்னம் ஏற்படுகிறது. ஒரு நட்சத்திரத்தில் நான்கு பாதங்கள். இந்த நான்கு பாதங்களில் விருச்சிக லக்னம் இருக்கக் கூடிய நேரத்தைக் கணக்கிட்டால் அது ஏறக்குறைய மாலை 7:40 மணியிலிருந்து 9.46 வரை இந்த உன்னதமான மைத்ர முகூர்த்தம் வருகிறது. அதாவது இந்த நேரத்தில் அனுஷம் 3 மற்றும் 4ம் பாதம் வருகிறது.
தேதி - ஏப்ரல் 26, 2024
கிழமை - வெள்ளி
நட்சத்திரம் - அனுஷம்
நட்சத்திர அதிபதி - சனி
லக்னம் - விருச்சிக லக்னம்
லக்கின அதிபதி - செவ்வாய்
ராசி - விருச்சிகம்
ராசி அதிபதி - செவ்வாய்
நேரம் - இரவு 07.40 முதல் 09.46 வரை
எளிய பரிகாரம்
இந்த நேரத்தில் கடன்பட்டவர்கள் தங்கள் கடனில் சிறு பகுதியைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால், அது பல நேரங்களில் சாத்தியமில்லாதிருக்கும். இந்த நாளில் இந்த நேரத்தில் கையில் பணமிருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் அதைத் திருப்பிச் செலுத்த வழியிருக்க வேண்டும்.
உங்கள் கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கவலைப் படவேண்டாம். உங்கள் கையில் இருக்கும் பணம் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு சிறுதொகையை எடுத்துக் கொள்ளுங்கள். அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி 10 ரூபாயாக இருந்தாலும் சரி. அந்தப் பணத்தை ஒரு கவரில் வைத்து, நீங்கள் யாருக்குத் தர வேண்டுமோ அவரின் பெயரை அந்தக் கவரில் எழுதிவிடுங்கள். வங்கிக் கடனாக இருந்தால் வங்கியின் பெயரை எழுதிவிடுங்கள். பின்பு அந்தக் கவரை சுவாமிபடம், பூஜை அறை அல்லது நீங்கள் வழக்கமாகப் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள்.
பின்பு வீட்டில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வத்தின் படத்துக்கு அல்லது சிவலிங்கம் போன்ற சிறு மூர்த்தங்கள் இருந்தால் அதற்கு சிறிது அரிசி மாவு கொண்டு அபிஷேகம் செய்து ஏதேனும் ஒரு பூ சாத்தி வழிபடுங்கள். குறைந்தது ஐந்து நிமிடம் சுவாமிக்கு முன்பாக அமர்ந்து சிவபுராணம் அல்லது கோளறுபதிகம் பாடுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த தெய்வ ஸ்லோகத்தைப் பாடி ஆராதியுங்கள்.
அவ்வாறு செய்யும்போது உங்களின் விருப்பமும் வேண்டுதலுமான செல்வ வளம் அதிகரிக்க இறைவன் அருள்புரிவார். அதனால் விரைவிலேயே உங்கள் கடன்கள் அடையும்.
நீங்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும்போது எடுத்துவைத்த அந்தச் சிறு தொகையையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். இது உங்களின் விருப்பத்துக்கும் பிரயாசைக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் என்பதை உணருங்கள். இன்று வெள்ளிக்கிழமை. அதனால் அனைவரும் கட்டாயம் அன்னை மகாலட்சுமியை வழிபட்டு செல்வவளம் பெறுங்கள்” .
எப்போது எல்லாம் கடனை திருப்பி அடைக்கலாம்?
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாள் மற்றும் நேரத்தில் கடனை திருப்பி கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பி தரலாம். செவ்வாய்க்கிழமையில் வரும் செவ்வாய் ஓரை நேரத்தில் கடனை திருப்பி தரலாம்.
சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும். மற்ற கிழமைகளில் வரும் மைத்ர முகூர்த்த நேரத்தை விட செவ்வாய்க்கிழமையில் வரும் மைத்ர முகூர்த்த நேரம் கடனை திருப்பி அடைக்க மிகவும் ஏற்றதாகும்.
வாழ்க வளமுடன்...
No comments
Thank you for your comments