Breaking News

காட்பாடி ரயில் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தும் அவலம்

 வேலூர், ஏப்.2-

காட்பாடி ரயில் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக “நோ பார்க்கிங்” இடத்தில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.


வேலூர் மாவட்டம், காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம், 24 மணி நேரமும் மிகவும் சுறுசுறுப்பாகவும், முழு இயக்கத்துடனும் காணப்படுகிறது. குறிப்பாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப் படுகின்றன. இதனால் இங்கு பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். 

இங்கே கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனித்தனி பார்க் வசதியுடன் இடங்கள் ஒதுக்கி தரப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் சில விஷமிகள், இரு சக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக “நோ பார்க்கிங்” இடத்தில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். 

இதனால் காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து முத்தமிழ் நகர் வழியாகச் செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட காரணமாக அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு பக்கத்திலேயே ரயில் டிக்கெட் வழங்கும் இடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமும் ரோந்து வரும் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இதைப் பற்றி எல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிடுவதால் இதுபோன்ற விஷம செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

முன்பெல்லாம் இதுபோன்ற “நோ பார்க்கிங்” இடத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் செயினை போட்டு கட்டி அதற்கு அபராதம் விதிக்கப்படும். அதனால் இது போன்ற வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனங்களை ஒழுங்கான முறையில் பார்க்கிங் இடத்தில் நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

ஆனால் நாளடைவில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல யாரும் கண்டும் காணாமல் விட்டுவிட்டதால், அவரவர் விருப்பம் போல் “நோ பார்க்கிங்” இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு போக்குவரத்துக்கு பெருத்த இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர். 

இருசக்கர வாகனங்கள் ஒருபுறம் அணிவகுத்து நிற்கின்றது என்றால், ஆட்டோக்களை ஒருபுறம் தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர் ஆட்டோ ஓட்டுநர். இதனால் ரயில் பயணிகள் நடந்து செல்லவோ அவர்களது லக்கேஜூகளை கொண்டு செல்ல முடியாமல் தடுமாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

அதனால் ரயில்வே போலீஸார், பாதுகாப்பு படையினர்  “நோ பார்க்கிங்” இடத்தில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து,  உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments

Thank you for your comments