Breaking News

உண்டு, உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம், ஏப்.27:

உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விசூர் ஊராட்சியில் உள்ள பாரதியார் உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்று பள்ளிகளுக்கு செல்லும் மாணவியர்கள் 32 பேருக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விசூர் ஊராட்சியில் பாரதியார் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையும், காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனமும் இணைந்து கல்குவாரிகள், அரிசி ஆலைகள் ஆகியனவற்றில் பள்ளிக்கு செல்லாமல் வறுமையின் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிய 33 பேரைக் கண்டறிந்து அவர்களுக்கு தொடர்ந்து 2 ஆண்டுகளாக முறையாக கல்வி பயில வைத்தனர். 

சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு கல்வி பயின்ற இவர்கள் அவரவர் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கான சான்றிதழ் வழங்கும் விழா பட்டமளிப்பு விழா என்ற பெயரில் நடைபெற்றது.

விழாவிற்கு குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட முதன்மை மேலாளர் கிருபாகரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் குமார் மற்றும் வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரேம் ஆனந்த், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் மூர்த்தி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி ஆகியோர் 9 ஆம் வகுப்பு பயில செல்லும் மாணவியர் 12 பேருக்கும், 8 ஆம் வகுப்பு செல்லும் மாணவியர் 21 பேர் உட்பட மொத்தம் 33 பேருக்கு பட்டங்களை வழங்கினார்கள். முன்னதாக வட்டார மேற்பார்வையாளர் செந்தில்முருகன் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் ராஜேஷ்,ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன முதுநிலை மேலாளர்கள் தூயவன், சுந்தர்,சரவணன்,ஆசிரியர்கள் மனிஷா, நிஷா, அனுஸ்ரீ, மாணவியரின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

ஏற்பாடுகளை ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன திட்ட மேலாளர் ஜெகத்ரட்சகரன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

 

No comments

Thank you for your comments