Breaking News

தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்: பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு - இருவர் விடுவிப்பு

விருதுநகர்: 

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

அதேவேளையில் 2-ஆம் மற்றும் 3 ஆம் குற்றவாளிகளான பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. முருகன், கருப்பசாமி மீது சுமத்தப்பட்ட குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் இருவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேராசிரியர் நிர்மலா தேவி

பின்னணி என்ன?:

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி (52). 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத் துறையில் பேராசிரியையாக இருந்து வந்தவர் நிர்மலா தேவி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பாடம் எடுத்து வந்தார். இவருக்கு அந்த பல்கலைக்கழகத்தில் அதிக செல்வாக்கு இருந்ததாக கூறப்படுகிறது. 

முக்கிய புள்ளிகளுக்கு விருந்து

தேவாங்கர் கல்லூரியில் ஏழ்மை நிலையில் இருந்த மாணவிகளை நிர்மலா தேவி தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி முக்கிய புள்ளிகளுக்கு விருந்தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


விடுவிக்கப்பட்ட முருகன், கருப்பசாமி 

மாணவிகள் புகார்

அதையடுத்து, நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதையடுத்து, நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். நிர்மலா தேவி மீது மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர்.

ஆடியோ வைரல்

ஒரு மாணவியை சமாதானம் செய்ய நிர்மலா தேவி பேசிய ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த மாணவியின் பெற்றோரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  2018 மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது.

வழக்குப் பதிவு-கைது

மாணவிகளின் புகார் கடிதம், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கடிதம், மாணவிகளுக்கு அவர் அனுப்பிய குறுந்தகவல்கள், கல்லூரி கல்வி இணை இயக்குநரின் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் 2018, ஏப். 16-ம் தேதி வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

விசாரணை

பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர் விசாரணையில், பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். 

நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை குழு

 இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

1,160 பக்கம் குற்றப்பத்திகை:

இந்த வழக்கில் 2018ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கை ஏப்ரல் 30ம் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பு

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர். 

உதவி பேராசிரியர் முருகன் - ஆய்வு மாணவர் கருப்பசாமி

இதில் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்காததால், அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். மேலும், இந்த வழக்கில் 5 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளி என நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.

அப்போது நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், "தண்டனையை குறைத்து வழங்க வேண்டும். மேலும், தங்கள் தரப்பு வாதங்களை தெரிவிக்க, தண்டனையை நாளைக்கு (ஏப்.30) ஒத்தி வைக்க வேண்டும்" என வாதிட்டார். ஆனால், சி.பி.சி.ஐ.டி தரப்பு வழக்கறிஞரோ சந்திரசேகர் இன்றைக்கே தீர்ப்பு வழக்க வேண்டும் என முறையிட்டார். இதனால் வழக்கை பிற்பகல் 2:30 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

நாளை தண்டனை விவரம்

பின்னர் பிற்பகல் 2:50 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "நாளை செவ்வாய்க்கிழமை (ஏப்.30) தண்டனை விவரம் வழங்கப்படும்" என அறிவித்து நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.



No comments

Thank you for your comments