Breaking News

சட்டவிரோத மணல் கொள்ளை புகார்: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர் - அலைக்கழித்ததாக வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

 சென்னை, ஏப்.25-

சட்ட விரோத மணல் குவாரி முறைகேடு வழக்கில் வேலூர், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.


 சோதனை -  வங்கி கணக்குகள் முடக்கம்

தமிழகத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவது தொடர்பாக பல்வேறு வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மணல் அள்ளும் விவகாரம் தொடர்பாக குவாரிகள், குவாரி அதிபர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு 2.33 கோடி பணம், 56 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், 13 கோடி ராய் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர். மேலும் 13 கோடி ரூபாய் இருப்பில் உள்ள 30 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

சிண்டிகேட் குழு

இதன் தொடர்ச்சியாக மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் சண்முக பாண்டியன் கருப்பையா ராமச்சந்திரன் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் இவர்கள் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதற்காக ஒரு சிண்டிகேட் போன்ற குழுவை அமைத்துக் கொண்டு அனுமதிக்கப்பட்ட அளவைவிட மணல் அள்ளப்பட்டதும், சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பித்து இருப்பதும் தெரியவந்தது.  மேலும் அரசு ஆவணங்களின் பதிவு செய்யப்பட்ட அளவைவிட அதிகப்படியான மணல் அள்ளப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

சம்மன்

இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பெற்றனர். 

சொத்துக்கள் முடக்கம்

இதனை அடுத்து சட்ட விரோதமாக மணல் அள்ளும் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை 130 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது. இதில் 29 மணல் அள்ளும் இயந்திரங்கள் உட்பட 128 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மணல் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்கில் இருந்த 2.25 கோடி ரூபாய் முடக்கப்பட்டது.

ஆட்சியர்களிடம் விசாரணை

இந்த நிலையில் சட்டவிரோதமாக மணல் அள்ளி தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தி இருப்பதால், குவாரிகளில் மணல் அள்ளுவதற்கு உரிய அனுமதியை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு தெரிந்து, இந்த முறைகேடு நடந்துள்ளதா என்பதை விசாரிக்கவும், மணல் அள்ளப்பட்ட விவரங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவும், திருச்சி, தஞ்சாவூர் கரூர், அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பலமுறை அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.  

வழக்கு

ஆனால் இவர்கள் ஆஜராகாமல் உயர்நீதிமன்றத்தை நாடினர், உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்கலாம், ஆனால் ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரணை நடத்தக் கூடாது என தெரிவித்தது.  இதனால் அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கூறி உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

அமலாக்கத்துறையில் ஆஜர்

அதன் அடிப்படையில் இன்று காலை 10.40 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகினர். பின்னர் ஐந்து மாவட்ட ஆட்சியர்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் குஷ்குமார் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர். 

வேலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள சுப்புலட்சுமி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் மணல் குவாரி தொடர்பான ஆவணங்களை கையில் எடுத்துச் சென்றுள்ளனர்.

இவர்களிடம் மணல் குவாரி அதிபர்கள் மணல் அல்ல எவ்வளவு அனுமதி கேட்டனர், அதில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது, போன்ற விவரங்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றனர். தனித்தனியாக இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அளிக்கக்கூடிய வாக்குமூலத்தை வீடியோ பதிவாகவும் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அலைகழிப்பு - குற்றச்சாட்டு

இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக அவர்களது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

அதாவது, சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக காத்திருந்த ஐந்து மாவட்ட ஆட்சியர்களிடம், இங்கு அமலாகத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்படவில்லை எனவும், நுங்கம்பாக்கம் குஷ்குமார் சாலையில் இருக்கக்கூடிய சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது, எனவே அந்த இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். 

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜரான ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் ஆவணங்களுடன் வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு சாஸ்திரி பவன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, மற்றொரு அமலாக்கத்துறை அலுவலகமான நுங்கம்பாக்கம் குஷ்குமார் சாலையில் உள்ள அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். மாவட்ட ஆட்சியர்கள் எந்த அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என முறையான எந்த தகவலும் அளிக்கவில்லை எனவும், இதனால் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments

Thank you for your comments