ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மறைவு - தலைவர்கள் இரங்கல்
ஈரோடு:
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திராவிட முன்னேற்ற கழகத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட ஆற்றியவர். பின்னர் அண்ணன் வைகோ உடன் இணைந்து பயணப்பட்டார்.
ஆற்றல்மிகு தளகர்த்தராக செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொண்ணா துயரத்தை தருகிறது. அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்க பற்றாளர்களுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி:
ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான அ. கணேசமூர்த்தி அவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. அ.கணேசமூர்த்தி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ராமதாஸ்:
மதிமுகவின் மூத்த நிர்வாகியும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவினருக்கும், கணேசமூர்த்தி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணாமலை:
ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
கணேசமூர்த்தி குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் அண்ணன் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும், தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!.
ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான திரு கணேசமூர்த்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 28, 2024
திரு கணேசமூர்த்தி அவர்கள் குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் அண்ணன் வைகோ மற்றும்… pic.twitter.com/rYiKOk91YI
ஜி.கே.மணி:
ஈரோடு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து மீளா துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
செல்வப்பெருந்தகை:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான அ. கணேசமூர்த்தி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. மதிமுக கட்சி ஆரம்பித்த காலத்திருந்தே வைகோ அவர்களுடன் இணை பிரியாமல் ஒரு போர்ப்படைத் தளபதியாக இருந்தவர் .அ.கணேசமூர்த்தி. ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.
அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், மதிமுக செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரங்கல் செய்தி
— Selvaperunthagai K (@SPK_TNCC) March 28, 2024
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான திரு.அ. கணேசமூர்த்தி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. ம.தி.மு.க. கட்சி ஆரம்பித்த காலத்திருந்தே திரு.வைகோ அவர்களுடன் இணை பிரியாமல் ஒரு போர்ப்படைத் தளபதியாக… pic.twitter.com/jLfXi673Sf
ஜி.கே. வாசன்:
மதிமுகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தான் சார்ந்திருந்த கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர். பாராளுமன்றத்தில் தொகுதி மக்களுக்காக குரல் கொடுத்தவர். அன்னாரை இழந்து வாடும் மதிமுகவினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முத்தரசன்:
வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்த போதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவை தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர்.
உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ.கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறி கொடுத்து விட்டது.
அ.கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள்
அ.கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.
No comments
Thank you for your comments