Breaking News

விடையாற்றி உற்சவம் நிறைவு - காஞ்சி காமாட்சி அம்மன் புஷ்பப் பல்லக்கில் வீதியுலா

காஞ்சிபுரம்,மார்ச் 6:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் விடையாற்றி உற்சவம் நிறைவு பெற்றதையடுத்து உற்சவர் காமாட்சி அம்மன் செவ்வாய்க்கிழமை இரவு பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


படவிளக்கம் : விடையாற்றி உற்சவ நிறைவைத் தொடர்ந்து பூப்பல்லக்கில் பவனி வந்த காமாட்சி அம்மன்(உள்படம்) லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி


மகா சக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி அம்மன் தினசரி வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் காலையிலும்,மாலையிலும் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வந்தார்.

வருடாந்திர பிரமோற்சவம் பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதன் தொடர்ச்சியாக அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விடையாற்றி உற்சவம் மறுநாள் 26 ஆம் தேதி தொடங்கியது.

விடையாற்றி உற்சவத்தையொட்டி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் பவனி வந்து சுக்ர வார மண்டபத்துக்கு எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.விடையாற்றி உற்சவத்தின் நிறைவை தொடர்ந்து காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இவ்விழாவில் தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் ஜான்பாண்டியன் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.விடையாற்றி உற்சவத்தினையொட்டி பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் பவனி வந்த நிகழ்வுடன் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நிறைவு பெற்றது.


No comments

Thank you for your comments