மதச்சார்பின்மையே இந்திய நாட்டின் அடையாளம் - அ.சௌந்தர்ராஜன் பேச்சு
காஞ்சிபுரம், மார்ச் 31:
காஞ்சிபுரம் காந்தி சாலையில் பெரியார் தூண் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.திமுக வேட்பாளர் க.செல்வத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு சிஐடியூ அமைப்பின் மாநிலத் தலைவரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அ.சௌந்தர்ராஜன் பேசியது.
பாஜக அரசால் பெரும் பணக்காரர்கள் மட்டும் தான் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.குறு,சிறு தொழில்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.
மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும்,சமமாகவும் இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. தமிழகத்துக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது. இந்திய தேசத்தை இந்துமதம் என்ற ஒற்றை மதத்துக்குள் அடக்க முயற்சிக்கிறார் மோடி. இந்தியா முழுமைக்கும் ஒரே கலாச்சாரம் என்பது எப்படி சாத்தியமாகும். நமக்கு வழிகாட்டுவது அரசியல் சட்டமேயாகும்.மதச்சார்பின்மை என்பது தானே இந்திய தேசத்தின் அடையாளம். நாம் அனைவரும் ஒன்று என்பது தானே நாட்டின் பலம்.
சமையல் எரிவாயு உருளை ரூ.400 இலிருந்து 1200 ஆக உயர்ந்திருக்கிறது. தேர்தலுக்காக ரூ.100 குறைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறது மோடி அரசு. விலையேற்றம் மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது.மத்திய அரசின் பருத்திக் கொள்கை,பஞ்சுக்கொள்கை, ஜிஎஸ்டி வரி இவை மூன்றுமே ஜவுளித் தொழிலையே அழித்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிர்க்கு இலவசமாக பேருந்து பயண திட்டம் உட்பட பல நல்ல திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருதாகவும் அ.சௌந்தர்ராஜன் பேசினார்.
கூட்டத்திற்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் இ.முத்துக்குமார்,ஐ.ஆறுமு நயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு,பி.ரமேஷ், ஆர்.சௌந்தரி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சியின் நகர் செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.செயற்குழு உறுப்பினர் ஆர்.மதுசூதனன் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments