Breaking News

காஞ்சிபுரம் மாமன்ற கூட்ட அரங்கில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 12:

காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும்,உறுப்பினர்களை மாநகராட்சி ஆணையர் மதிக்காமல் நடந்து கொள்வதாகவும் கூறி துணைமேயர் உட்பட உறுப்பினர்கள் பலரும் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் அண்ணா அரங்க மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.துணை மேயர் ஆர்.குமரகுருநாதன் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் செந்தில் முருகன் வரவேற்று பேசினார்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அண்மையில் மாநகராட்சி ஆணையாளராக செந்தில் முருகன் என்பவர் பொறுப்பேற்றார்.

கூட்டம் தொடங்கியதுமே மாநகராட்சி ஆணையாளர் உறுப்பினர்கள் யாரையும் மதிப்பதே இல்லை,மாநகராட்சி எல்லைக்குள் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றனர்.மாநகராட்சியின் தூய்மைப்பணிகளை சிறப்பாக கவனிக்காமல் நகரமே சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட செவிலமேடு பகுதியில் ரூ.250 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான பூமி பூஜை விழாவிற்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் விழா நடைபெற்றது. எனவே இது போன்ற முறைகேடுகளைக் கண்டிப்பதாக கூறி திமுக உறுப்பினர்கள் உட்பட பல உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்.

சபையில் கூச்சல், குழப்பம் நிலவியதை தொடர்ந்து அவையில் கொண்டு வரப்பட்ட 21 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக கூறி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் கூட்டத்தை பாதியிலேயே முடித்து எழுந்து சென்றார்.

மேயர் கூட்டத்திலிருந்து சென்ற பிறகும் துணை மேயர் ரா,குமரகுருநாதன், திமுக உறுப்பினர்கள்,அதிமுக,பாமக,பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 30க்குகம் மேற்பட்ட உறுப்பினர்களும் தொடர்ந்து மன்ற கூட்ட அரங்கிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாலை 6 மணி வரை போராட்டம் தொடர்ந்ததால் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானமாகாமல் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

அதிமுக உறுப்பினர்கள் மாநகராட்சி முறைகேடுகள் என்ற பேனரை பிடித்தபடி நின்றனர்.அவையில் கொண்டு வரப்பட்ட 21 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாகவும்,கூட்டம் இன்று புதன்கிழமை காலையில் மீண்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments

Thank you for your comments