Breaking News

பின்பற்றவேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் - அறிவிப்பு

 வேலூர்:  

வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகளை தவறாமல் பின்பற்றி சுதந்திரமாக  மற்றும் நேர்மையாக தேர்தலை நடத்திட முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமென  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ-ஆ.ப,. அவர்கள் தெரிவித்துள்ளார்.



தேர்தல் நடத்தை நெறி விதிகள்

v இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்திய பொதுத்தேர்தல்கள் அறிக்கை வெளியிடப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடுகிறது.

v தேர்தல் நடத்தை விதிகள் பொதுத்தேர்தலை சுமூகமாகவும், ஆரோக்கியமாகவும் நடத்திட உதவுகிறது.

v அனைத்து கட்சிகளையும் சமமாக பாவிக்கும் நடைமுறையை உறுதி செய்கிறது. மேலும் தேர்தல் முறைகளின் மீது வாக்காளர்களிடையே நம்பிக்கையை மேம்படுத்திட உதவுகிறது.

v அரசு அலுவலர்கள் தவறாக பயன்படுத்தபடுவதை தடுக்கிறது.

v வாக்காளர்களைக் கவரும் விதமாகவோ, அச்சுறுத்தப்படுவதையோ அல்லது வாக்குக்கு பணம் அளிக்கப்படுவதையோ அல்லது இதுபோன்ற தேர்தல் குற்றங்களைத்  தடுத்திட தேர்தல் நடத்தை விதிமுறைகள் பேருதவி புரிகின்றன.

v தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் எந்த ஒரு அரசு அலுவலங்களிலும் அரசியல் கட்சிகள் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள் வைத்துக்கொள்ளக்கூடாது. அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

v அரசியல் கட்சியினை சார்ந்த மறைந்த தலைவர்களின் சிலையினை மறைத்திட வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் சிலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், கல்வெட்டுகள் கட்டாயம் மறைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

v வரலாற்று சிறப்பு மிக்க மறைந்த தேசிய தலைவர்கள், கவிஞர்கள், இந்திய ஜனாதிபதி மற்றும் ஆளுநர் புகைப்படம் அலுவலங்களில் வைத்துக்கொள்ள தடையேதுமில்லை.

v தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில் தேசிய கொடிகள் பயன்படுத்த அனுமதி இல்லை.

v துறை சார்ந்த நலத்திட்ட விழாக்கள் நடத்திட அனுமதியில்லை. சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் கால் நடைகள் மருத்துவ சிகிச்சைகளின் போது விளம்பர பேனர்கள் வைத்திட கூடாது.

சுவர் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றுதல் 

v அரசு சொத்துக்களைச் சேதப்படுத்துதல் இந்த செயல் நோக்கத்திற்காக, யாதொரு அரசு அலுவலகமும் அலுவலகக் கட்டடம் அமைந்துள்ள வளாகமும் அரசு வளாகம் என்பதில் அடங்கும். அரசுக்கு சொந்தமான இடத்திலுள்ள அனைத்து சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகள் / காகிதங்கள் அல்லது ஏனைய யாதொரு வகையிலான சேத நடவடிக்கைகள், விளம்பரப் பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்றவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும்.

v பொது சொத்தைச் சேதப்படுத்துதல் மற்றும் பொது இடத்தைத் தவறாகப் பயன்படுத்துதல். பொது சொத்திலும், இரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள். இரயில்வே பாலங்கள், சாலைகள், அரசு பேருந்துகள், மின்சாரம்/ தொலைபேசி கம்பங்கள், நகராட்சி/உள்ளூர் அமைப்புகளின் கட்டடங்கள் போன்ற பொது இடங்களிலும் உள்ள சுவர் எழுத்து, சுவரொட்டிகள் / காகிதங்கள், விளம்பரப் பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்ற வகையிலான அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் ஆகியவை ஆணையத்தால் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள்  அகற்றப்பட வேண்டும்

v தனியார் சொத்தைச் சேதப்படுத்துதல் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அனுமதியற்ற அரசியல் விளம்பரமும் உள்ளூர் சட்டத்திற்குட்பட்டும் நீதிமன்றத்தின் ஆணைக்குட்ப்பட்டும் ஏதேனும் அரசியல் விளம்பரம் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருப்பின், அவ்விளம்பரமும் ஆணையத்தால் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து 72  மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். 

v தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் அரசின் சாதனைகளை விளக்கும் யாதொரு விளம்பரத்தையும் அரசு/மின்னணு ஊடகத்திலிருந்து நீக்குவதற்கு/ அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு வாகன பயன்பாடு

v அரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் குறித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தொகுக்கப்பட்ட கட்டளைகளில் தேர்தல்களின்போது பிரச்சாரத்திற்காக, தேர்தல் அல்லது தேர்தல் தொடர்புடைய பயணத்திற்காக (அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிவிலக்குகளுக்குட்ப்பட்டு) அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது தேர்தலுடன் தொடர்புடைய நபரும்  அலுவலக வாகனத்தை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு அலுவலக வாகனம் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும். 

அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்குமான நடத்தை விதிமுறைகள்

பொதுவான நடத்தை விதிமுறைகள்

v பல்வேறு சாதி, இனம், மதம், மொழியைச் சார்ந்த மக்களிடையே வேறுபாடுகளைத் தீவிரமாக்கும் வகையிலான செயலிலோ ஒருவருக்கு ஒருவர் இடையில் வெறுப்பை உருவாக்கும் வண்ணம் அல்லது பதற்றத்துக்கு வழி செய்யும் எந்த செயலிலும் எந்தவொரு கட்சியோ வேட்பாளரோ ஈடுபடக்கூடாது.

v பிற கட்சிகள் மீது விமர்சனம் மேற்கொள்ளும்போது, அக்கட்சிகளின் கொள்கைகள், செயல்திட்டங்கள், கடந்த காலச் செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விமர்சனமாக இருக்க வேண்டும். பிற கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பொதுவாழ்க்கையோடு தொடர்பற்ற சொந்த வாழ்க்கையைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். பிற கட்சியினர் மீதான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

v வாக்குகளைப் பெறுவதற்காக, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கப்படக் கூடாது. தேர்தல் பிரசாரக் களமாக. மசூதி. சர்ச் மற்றும் கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது.

v தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டர் எல்லைக்குள்  தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருதல், தேர்தல் பரப்புரைக்கான நிறைவு நேரத்திலிருந்து வாக்குப் பதிவு முடிவடைவது வரையிலான 48 மணி நேரத்திற்குள் பொதுக் கூட்டங்கள் நடத்துதல் மற்றும் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரவும் மற்றும் திரும்ப அழைத்துச் செல்லவும் வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற "முறைகேடான" நடவடிக்கைகளை அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

v ஒரு தனி நபரின் அரசியல் கருத்துகள் அல்லது அரசியல் செயல்பாடுகள் ஆத்திரமூட்டும் வகையில் அமைய நேர்ந்தாலும், அமைதியான, இடர் இல்லாத குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கான அவரது உரிமை மதிக்கப்பட வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், தனிநபரின் கருத்துகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடும் விதமாக, அவர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டங்களிலும் மறியல்களிலும் ஈடுபடக் கூடாது.

v தனி நபருக்குச் சொந்தமான இடங்களில், கட்டடங்களில், சுற்றுச்சுவர்களில் அவர்களின் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், பதாகை வைத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், பரப்புரை வாசகங்களை எழுதுதல் போன்ற செயல்களை செய்ய அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் தங்களது தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது.

v அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தங்களது தொண்டர்களால் பிற கட்சியினர் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கும். ஊர்லவலங்களுக்கும் எவ்வித இடையூறும் தடங்கலும் ஏற்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஒரு கட்சியைச் சேர்ந்த தொண்டர்களோ ஆர்வலர்களோ பிற கட்சியினரின் பொதுக் கூட்டங்களில் நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ கேள்வி கேட்டோ தங்கள் கட்சியின் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தோ இடையூறு செய்யக்கூடாது. ஒரு கட்சியினர் ஓரிடத்தில் பொதுக்கூட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக பிற கட்சியினரின் ஊர்வலங்கள் நடத்தப்படக் கூடாது. ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்றொரு கட்சியின் தொண்டர்கள் அகற்றக்கூடாது.

v தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின் படி, உரிய ஆவணங்களின்றி ரூ.50,000/- க்கு மேற்பட்ட ரொக்கம் மற்றும் ரூ.10,000/- க்கு மேற்பட்ட பரிசுப் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.

v தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களால் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால்   அவற்றை திரும்பபெற உரிய ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  உள்ள மேல்முறையீட்டு அலுவலரை அணுகி தீர்வு பெறலாம். 

எனவே பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகளை தவறாமல் பின்பற்றி சுதந்திரமாக  மற்றும் நேர்மையாக தேர்தலை நடத்திட முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமென  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ-ஆ.ப,. அவர்கள் தெரிவித்துள்ளார்.                                     

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்


No comments

Thank you for your comments