Breaking News

கோவையில் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி: திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணி - குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி

  கோவை, மார்ச் 19-

கோவையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி சாய்பாபா கோயில் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை 2.5 கீ.மி தூரத்திற்குச் சாலை வாகனப் பேரணி சென்றார். இதில், 1998ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.



கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த ஆண்டும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தென் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று கோவை வருகை தந்தார். கர்நாடகாவில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, அங்கிருந்து விமானம் மூலமாக கோவைக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார்.

வாகனத்தில் பேரணி

இதையடுத்து, ஏற்கனவே திட்டமிட்டபடி சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ். புரம் தலைமை அஞ்சல் நிலையம் வரை திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணி சென்றார். சுமார் இரண்டரை கி.மீட்டர் தூரம் பிரதமர் மோடி திறந்த  வாகனத்தில் இருந்தபடியே சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் மக்களைச் சந்தித்தார்.  

உற்சாக வரவேற்பு

அப்போது அவரை வரவேற்பதற்காக இருபுறம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று மலர் தூவி அவரை வரவேற்றனர். இதனால் அவர் செல்லும் வழியெங்கும் வண்ண வண்ண மலர்கள் குவிந்து கிடந்தன.

கலை நிகழ்ச்சி

இதையொட்டி, கோவை மற்றும் கோவையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டிருந்தனர். நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் கலை குழுவினரால் நடத்தப்பட்டன.

பிரதமருக்கு வலதுபுறத்தில் மத்திய அமைச்சர் எல். முருகனும், இடதுபுறத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அமர்ந்திருந்தனர். மோடி மக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.  தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

மீண்டும் மோடி வேண்டும் மோடி

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், “மோடி மோடி” என்றும், “பாரத் மாதா கீ ஜெ” என்றும், “மீண்டும் மோடி வேண்டும் மோடி” என்றும் விண்ணை பிளக்கும் அளவுக்கு கோஷமிட்டனர். 

நீலகிரி மாவட்ட தோடர் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சாலையின் இருபுறங்களிலும் நின்று மோடியை பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். அவரும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தவாறு கை அசைத்தபடி வாகனத்தில் பேரணியாக சென்றார்.

தமிழகத்தில் வரும் ஒரு பிரதமருக்கு இப்படியொரு மக்கள் வரவேற்பு கிடைப்பது இதுவே முதன்முறை என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ரோடு ஷோ

கோவையில் வழக்கமாக அவர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார். ஆனால், இந்த முறை , பொதுக் கூட்டத்துக்கு பதில், ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.

அஞ்சலி

இதனையடுத்து 1998-ம் ஆண்டு பாஜக பொதுக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்த ஆர்எஸ்புரத்தில் நிறைவடைந்தது. 1998இல் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான 51 பேருக்கும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

அப்போது அவரிடம் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது நடந்தவற்றை குண்டுவெடிப்பின் போது காயமடைந்து பின்னர் குணமடைந்த தமிழ்நாடு பாஜக பொருளார் சேகர் விளக்கி கூறினார். 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் நடந்த முதல் அரசியல் பிரசாராமாக இந்த ரோடு ஷோ பார்க்கப்படுகிறது. அதேபோல நேற்று, பிரதமர் மோடி பொதுமக்களிடையே உரையாற்றவில்லை.

பொதுவாக கொங்கு மண்டலம் அதிமுகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ள இடமாக பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கைகோர்த்த நிலையில், கோவையில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. 

அதேபோல 1998-ல் கலவரத்திற்கு பின்னர் பாஜகவுக்கும் ஓரளவு வாய்ப்புள்ள இடமாகவும் கோவை இருக்கிறது. எனவே இதை வாக்கு வங்கியாக மாற்ற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. 

கோவையில் அண்ணாமலை போட்டியிடலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில், பிரதமரின் ரோட் ஷோ வாகனத்தில் அண்ணாமலை முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறார். மோடிக்கு பக்கத்தில் அண்ணாமலையும், மோடிக்கு சற்று பின் தள்ளி மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், மோடிக்கு பின்னால் வானதி சீனிவாசனும் இருந்தனர்.

மறுபுறம், கோவையில் அண்ணாமலை களமிறங்கினால், அவரை தோற்கடிக்க திமுக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. எனவேதான் சிபிஎம்-க்கு போன முறை ஒதுக்கப்பட்ட கோவை தொகுதி இந்த முறை ஒதுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

No comments

Thank you for your comments