Breaking News

ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் போட்டியிடுவது மகிழ்ச்சியே,காஞ்சிபுரத்தில் டிடிவி தினகரன் பேட்டி

காஞ்சிபுரம், மார்ச் 21:

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது என காஞ்சிபுரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.


காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை மரியாதை நிமித்தமாக ஸ்ரீமடத்தில் சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆசி பெற்றார்.அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது.

கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் முதலாக தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் போது ஜெயலலிதா காஞ்சி சங்கராசாரியாரை சந்தித்து ஆசி பெறுமாறு கேட்டுக்கொண்டார்.



அதன்படி அன்று சந்தித்து ஆசி பெற்றேன்.அன்று முதல் இன்று வரை தொடர்ந்து அவ்வப்போது சங்கராசாரியாரை சந்தித்து ஆசி பெறுவதும் வழக்கம்.மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றேன். பாஜக மதவாதக்கட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்வதில்லை.

பாஜகவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர்.3 வது முறையாக மோடி பிரதமராவது உறுதி. ஊழல் இல்லாத 10 ஆண்டுகளாக மோடியின் சாதனை ஆட்சி நடந்து வருகிறது.கடந்த தேர்தலை விட இத்தேர்தலில் பாஜக எம்பிக்கள் கூடுதலாக சென்று மக்களவையை அலங்கரிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது.நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் அவர் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.அவரது விருப்பபடியே ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். 

அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியும் பெறுவார்.என்னைப் பொறுத்தவரை பாஜக நிர்ப்பந்திக்கவில்லை.குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம்.எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கிய பிறகு எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்வேன்.

அமலாக்கத்துறை என்பது தனிப்பட்டஅமைப்பு.அதற்கு அளவில்லாத அதிகாரம் உள்ளது. இதை நீதிமன்றமும் சொல்லி இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுகிறார். அதே நேரத்தில் இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக் கூட சொல்ல முடியாத இந்துக்களின் விரோதியாகவே செயல்பட்டும் வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திருந்தினால் மட்டுமே அதிமுகவை பலப்படுத்த முடியும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். 

பேட்டியின் போது தாம்பரம் முன்னாள் நகர் மன்ற தலைவர் ம.கரிகாலன் உட்பட அவரது கட்சியின் நிர்வாகிகள்,ஆதரவாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments