Breaking News

“நீங்கள் நலமா” - பயனாளிகளிடம் நேரடியாக தொலைபேசியில் உரையாடிய கலெக்டர் கலைசெல்வி மோகன்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து முதல்வரின் முகவரி துறையின் கீழ் பயனாளிகளை தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த  கருத்துகளை கேட்டறியும் புதுமை திட்டமான “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை இன்று (06.03.2024) தொடங்கி வைத்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களை கேட்டறிந்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று “நீங்கள் நலமா” திட்டத்தினைத் தொடங்கி வைத்து, பயனாளிகளிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்கள்.

தமிழ்நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய காலத்தில் பொதுமக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு அலுவலரின் பொறுப்பாகும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வருகிறார்கள்.

அவ்வகையில் தமிழ்நாடு அரசு ஏழை எளிய விளிம்பு நிலை பொதுமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது. ஆணுக்கிங்கே பெண்நிகர் என்னும் சமத்துவப் பாதையில் குடும்பத் தலைவிகளின் உழைப்புக்கு அங்கீகாரம் அளித்து மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகை வழங்கிட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமும், ஏழை எளிய பெண்களின் உயர்கல்வியை ஊக்குவித்து உறுதி செய்திடும் வகையில் புதுமைப் பெண் திட்டமும், உலகை வெல்லும் இளைய தமிழகத்தை உருவாக்கிட கல்லூரிப் படிப்புடன் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கிட நான் முதல்வன் திட்டமும்,  மாபெரும் சமூக மாற்றத்திற்கான புதிய தொடக்கமாக பள்ளி செல்லும் குழந்தைகள் களைப்பின்றி பயில முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமும், மாநிலம் முழுவதும் வேறு மாவட்டங்களிலிருந்து வந்து நகரங்களில் தங்கி பணிபுரியும் பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காகத் தோழி தங்கும் விடுதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் நோக்குடன், மக்கள் மற்றும் அரசுக்கிடையேயான இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற “நீங்கள் நலமா” என்ற புதியதொரு திட்டம் இன்று முதல் (06.03.2024) நடைமுறைக்கு வந்துள்ளது.

மேற்படி திட்டம் முதல்வரின் முகவரித் துறையால் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக அரசுத் துறைகளின் செயல்பாட்டில் உள்ள முக்கியமான நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டம் பெறப்படும். அதனடிப்படையில், நலத்திட்டங்களின் பயன்கள் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அரசு வழங்கிடும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வழிவகைகள் மேற்கொள்ளப்படும்.  அதன் அடுத்த கட்டமாக பொதுமக்களுக்கு அரசுத் துறைகளால் வழங்கப்படும் இதர சேவைகளின் மீதும் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் பின்னூட்டங்கள் இதற்கென உருவாக்கப்படும் “நீங்கள் நலமா“ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.  இவ்வலைத்தளம் மக்களின் கருத்துகளைப் பெறும் ஒரு திறந்தவெளி அமைப்பாகச் செயல்படும். மேலும், இவ்வலைத்தளத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்த விவரத் தொகுப்பு பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்

No comments

Thank you for your comments