காஞ்சிபுரத்திற்கு மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்படும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
காஞ்சிபுரம்,மார்ச் 25
மக்களவைத் தொகுதியில் காஞ்சிபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வத்துக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.காஞ்சிபுரம் காந்தி சாலையில் தேரடி அருகில் அவர் திறந்த ஜீப்பில் நின்று கொண்டே தேர்தல் பிரச்சாரம் செய்த போது அவர் பேசியது..
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று சிறப்பாக செயல்பட்டதால் தான் இந்த மக்களவைத் தேர்தலிலும் க.செல்வத்துக்கே கட்சித்தலைமை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.
கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 2.87 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இத்தேர்தலில் அவர் குறைந்த பட்சம் 5லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டியது மக்களாகிய உங்களது பொறுப்பாகும்.
காஞ்சிபுரத்தில் அரசு புற்றுநோய் மருத்துவமனை ரூ.36 கோடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.மதுராந்தகம் ஏரி ரூ.120 கோடியில் தூர்வாரப்பட்டுள்ளது.மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் ரூ.343 கோடி மதிப்பில் புதைவடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.7 கோடியில் ராஜாஜி மார்க்கெட்டும்,ரூ.4.5 கோடி மதிப்பில் நேரு மார்க்கெட்டும் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் காஞ்சிபுரத்தில் மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்படும்.
அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை இரட்டை வழி ரயில் பாதை அமைக்கப்படும். கூடுதலாக சென்னைக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும். புதுமைப்பெண் திட்டம், காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம்,மகளிர்க்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்வின் போது எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமியுவராஜ்,மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன்,மாநகர பகுதி செயலாளர்கள்,ஒன்றிய செயலாளர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments