காஞ்சிபுரத்தில் ரூ.500-க்கு ஏலம் போன எம்எல்ஏ சுட்ட தோசை!
காஞ்சிபுரம், மார்ச் 28:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கடாபுரம் பகுதியில் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வத்துக்கு ஆதரவாக திமுகவினர் மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட துணைச் செயலாளர் ஜெகன்னாதன்,மாநகர பகுதி செயலாளர்கள்,மாமன்ற மண்டலக்குழு தலைவர்கள் உட்பட பலரும் வாக்கு சேகரிப்பின் போது உடன் வந்தனர்.
திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் வழி நெடுகிலும் இருந்த பொதுமக்களுக்கு கொடுத்துக் கொண்டும்,விளக்கிக் கொண்டும் வந்து கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் வெங்கடாபுரம் பகுதியில் தள்ளுவண்டிக் கடை ஒன்றின் அருகே இளைஞர்கள் சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ எழிலரசன் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தள்ளுவண்டி கடையில் தோசை சுடத்தொடங்கினார்.
பின்னர் தோசை மீது ஆட்டுக்கால் குழம்பையும் ஊற்றினார்.அப்போது திமுகவினர் சிலர் அந்த தோசையை ஏலம் விட்டனர்.100 இல் தொடங்கி 500 வரை ஏலம் போனது.
நிறைவாக ரூ.500க்கு தோசையை ஏலம் கேட்ட திமுக பிரமுகரிடமே எம்எல்ஏ எழிலரசன் அதைக் கொடுத்தார். இதனால் அப்பகுதியே நகைச்சுவையாக காட்சியளித்தது.
No comments
Thank you for your comments