திமுக நேரடி களம் காணும் 21 தொகுதிகள் - கூட்டணியில் எந்தக் கட்சி, எங்கே போட்டியிடுகிறது? - முழு தொகுப்பு
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக தலைமை முன்னதாக இறுதி செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முழுவதுமாக இன்று இறுதியாகியுள்ளது.
காங்கிரஸ்
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் கடந்த வாரம் கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள 9 தொகுதிகள் எவை என்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 10 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டார்.
1. திருவள்ளூர்(தனி), 2. கடலூர், 3.மயிலாடுதுறை, 4.சிவகங்கை, 5.திருநெல்வேலி, 6.கிருஷ்ணகிரி, 7.கரூர், 8.விருதுநகர், 9.கன்னியாகுமரி மற்றும் 10.புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி, ஆரணி மற்றும் தோல்வியுற்ற தேனி தொகுதிகளுக்கு பதிலாக மயிலாடுதுறை, கடலூர், திருநெல்வேலி தொகுதிகள் இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள்
இந்த முறையும் விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தனித் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன் களமிறங்குகிறார். திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார்.
கடந்த முறை மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்ட கோவை தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாக களம் காண்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட்
நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் தொகுதியில் கே.சுப்புராயனும், நாகப்பட்டினம் தனித் தொகுதியில் வை.செல்வராஜும் போட்டியிடவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
மதிமுகவுக்கு ஈரோடு தொகுதிக்கு பதிலாக இந்த முறை திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிமுக சார்பில் திருச்சியில், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என்று ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
ஈரோட்டில் திமுக வேட்பாளர் நேரடியாக களமிறங்குகிறார்.
கொமதேக-ஐயூஎம்எல்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் , இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம்
காங்கிரஸ் மற்றும் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததன் மூலம் திமுக நேரடியாக களம் காணும் 21 தொகுதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.
திமுகவின் 21 தொகுதிகள்:
1. தென் சென்னை
2. மத்திய சென்னை
3. வட சென்னை
4. ஸ்ரீபெரும்புதூர்
5. காஞ்சிபுரம்
6. வேலூர்
7. அரக்கோணம்
8. திருவண்ணாமலை
9. ஆரணி
10. கள்ளக்குறிச்சி
11. தருமபுரி
12. கோயம்புத்தூர்
13. பொள்ளாச்சி
14. சேலம்
15. ஈரோடு
16. நீலகிரி
17. தஞ்சாவூர்
18. பெரம்பலூர்
19. தேனி
20. தென்காசி
21. தூத்துக்குடி
ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, தூத்துக்குடியில் கனிமொழி, வடசென்னை கலாநிதி வீராசாமி, மத்திய சென்னையில் தயாநிதிமாறன், நீலகிரியில் ஆ. ராசா, வேலூரில் டி.எம்.கதிர் ஆனந்த் துரைமுருகன் உள்ளிட்டோர் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் பலத்தை நிரூபிக்கும் விதமாக கோவை, ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளை கூட்டணியிடம் இருந்து பெற்று திமுகவே நேரடியாக களம் காண்கிறது.
மாற்றிக் கொண்ட தொகுதிகள்:
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திருச்சி மற்றும் தேனி தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் திருச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வென்றிருந்தார். அதேநேரம் தேனியில் போட்டியிட்ட இளங்கோவன் தோல்வி அடைந்தார். இதேபோல் ஆரணி தொகுதி கடந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக தற்போது கடலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை மற்றும் நெல்லை மூன்றுமே கடந்த முறை திமுக வென்ற தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திமுக விட்டுக்கொடுத்துள்ளது. மேலும், கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட ஆரணி மற்றும் தேனி தொகுதிகளில் திமுக இம்முறை நேரடியாக களம் காண்கிறது.
இதற்கிடையே, கடந்தமுறை காங்கிரஸுக்கு திருச்சி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த முறை ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது.
தனிச் சின்னத்தில் போட்டி:
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் சின்னத்தை விடுத்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றன. ஆனால், இம்முறை விசிகவும் மதிமுகவும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இம்முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஒரே கூட்டணிக் கட்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. நாமக்கல் தொகுதியில் இக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

No comments
Thank you for your comments