Breaking News

பிரதமர் மோடியின் கோவை ரோட் ஷோ! - 1998ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

கோவை: 

கோவையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி சாய்பாபா கோயில் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை 2.5 கீ.மி தூரத்திற்குச் சாலை வாகனப் பேரணி சென்றார். 

இதில், 1998ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதே நேரத்தில் பாஜக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதில் முதல் கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி கடந்த மார்ச் 15ஆம் தேதி கன்னியாகுமரியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், தேர்தல் தேதி அறிவித்த பின், கோவையில் நடந்த ரோடு ஷோவில் பங்கேற்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவக்கினார். 

ரோட் ஷோ (சாலை வாகனப் பேரணி) 

கோவை சாய்பாபா கோயில் சந்திப்பு பகுதியில் தொடங்கிய ரோட் ஷோ (சாலை வாகனப் பேரணி) ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை 2.5 கீ.மி தூரத்திற்கு நடைபெற்றது.

பிரதமர் மோடி அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஊர்வலமாக வந்தார். அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் காரில் பிரதமர் மோடியுடன் வந்தனர் இந்த ரோட் ஷோவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

998ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி 

இந்த ரோட் ஷோவின் போது பொதுமக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து 1998ஆம் ஆண்டு பாஜக பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்த ஆர்எஸ்புரத்தில் நிறைவடைந்தது. 1998இல் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான 51 பேருக்கும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவரிடம் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது நடந்தவற்றை குண்டுவெடிப்பின் போது காயமடைந்து பின்னர் குணமடைந்த தமிழ்நாடு பாஜக பொருளார் சேகர் விளக்கி கூறினார். முன்னதாக கோவையில் பிரதமர் மோடி ரோட் ஷோ நடக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்கான கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது.

கோவை காவல்துறை பள்ளி மாணவர்கள் தேர்வு, அலுவலகங்கள் செல்பவர்கள், சந்தைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பலருக்கு இடையூறாக இருக்கும் எனக்கூறி பிரதமர் ரோட் ஷோவிற்கு அனுமதி மறுத்தது. இதனையடுத்து, மோடி ரோட் ஷோவிற்கு அனுமதி கேட்டு பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிரதமர் மோடியின் ரோட் ஷோ மாலையில் நடப்பதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாது எனக் கூறி, ரோட் ஷோவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

பாஜக - பாமக கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாமக இடையே கூட்டணி அமையும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்பொது யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக - பாமக கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


 


 


 


 



No comments

Thank you for your comments