வேலூர் அணைகட்டில் 1150 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்
வேலூர்:
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச வீட்டு மனை வழங்குவது குறித்த முகாம்கள் நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
நேற்றைய தினம் மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விதமாக மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி ரங்காலாயா திருமண மண்டபத்தில் நேற்று (04.03.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மற்றும் காட்பாடி வட்டங்களை சார்ந்த 542 பயனாளிகளுக்கு ரூபாய் 4,73,41,296/- மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
இன்று அணைக்கட்டு வட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விதமாக அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 28 கிராமத்தை சேர்ந்த 1150 பயனாளிகளுக்கு ரூ.11,27,30,000/- மதிப்பில் இலவச பட்டா மனுக்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாபு, ஒன்றியக்குழுத் தலைவர்கள் சி. பாஸ்கரன், அமுதா ஞானசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் சித்ரா குமாரபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி. கிருஷ்ணமேனன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜே. மகாலிங்கம், ஊராட்சிமன்றத்தலைவர் என். செந்தில் குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.க.கவிதா, வட்டாட்சியர் வேண்டா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments