தங்கப்பல்லக்கில் வீதி உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்
காஞ்சிபுரம், பிப்.19:
மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் பெருமைக்குரியதும், அயோத்தி மன்னர் தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து ராமர் பிறந்த வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் இம்மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இவ்விழாவையொட்டி தினசரி காலை,மாலை இரு வேளையும் உற்சவர் காமாட்சி வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 5வது நாள் நிகழ்ச்சியாக காலையில் காமாட்சி அம்பிகை தங்கப்பல்லக்கில் ரோஸ் நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் பவனி வந்தார். காஞ்சிபுரம் சங்கரமடம், பூக்கடைசத்திரம் ஆகிய பகுதிகளில் வழிநெடுக மக்கள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்தும்,கற்பூர தீபாராதனைகள் காண்பித்தும் வழிபட்டனர்.இரவு நாக வாகனத்தில் அலங்காரமாகி வீதியுலா வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெள்ளித்தேரோட்டம் இம்மாதம் 23 ஆம் தேதியும்,தங்கக்காமகோடி விமானத்தில் அம்பாள் வீதியுலா வரும் நிகழ்ச்சி இம்மாதம் 25ஆம் தேதியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments