Breaking News

காஞ்சியில் முதல் முதலாக சிறிய கைத்தறிப் பூங்கா - அமைச்சர் ஆர்.காந்தி தொடக்கி வைத்தார்

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை தொழிற்பேட்டை, தமிழ்நாடு சரிகை ஆலை  வளாகத்தில்,  இன்று (29.02.2024) சிறிய அளவிலான கைத்தறி பூங்கா, காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு வளாகம் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் கல்வெட்டு மற்றும் காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் கல்வெட்டினையும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் மற்றும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்து, கைத்தறி பொருட்கள் கண்காட்சி பார்வையிட்டு, 52 நெசவாளர்களுக்கு ரூ. 62.75  இலட்சம்  மதிப்பிலான  முத்ராதொழிற்கடன்களும், 15 நெசவாளர்களுக்கு மருத்துவ தொகுப்புகளையும் வழங்கினார்கள்.


கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டின் கைத்தறி தொழிலை மேம்படுத்தவும், இளம் தலைமுறையினரை கைத்தறி தொழிலில் ஈடுபடுத்தவும், நெசவுத் தொழிலுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணியினை மேற்கொள்ளவும் (Infrastructure Development)  பல்வேறு சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டரை வருடங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா (Handloom Silk Park) துவக்கப்பட்டு, தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.2.50  கோடி மதிப்பில் புதிய ஷோரூம் (Showroom) திறந்து வைக்கப்பட்டது. 

தமிழ்நாடு சரிகை ஆலையில் ரூ.2.50 கோடி மதிப்பில் அலுவலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு (Renovated Office Building)   திறந்து வைக்கப்பட்டது. ரூ.388.87 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 616 நெசவாளர்களுக்கு முத்ரா கடன் ரூ.616.25 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சரகத்தில் 7 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2,640 நெசவாளர்கள் பயன் அடைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து இன்று காஞ்சிபுரத்தில்  சிறிய அளவிலான கைத்தறி பூங்கா (Mini handloom Park) 2023-24 பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூ.2 கோடி செலவில் அறிவிக்கப்பட்ட  சிறிய அளவிலான கைத்தறி பூங்கா (Mini handloom Park) தற்போது காஞ்சிபுரத்தில் முதல் பூங்கா துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஓரிக்கையில் அமைந்துள்ள தமிழ்நாடு சரிகை ஆலை வளாகத்தில் ரூ.3.00 கோடி செலவில் இரண்டு கட்டங்களில் 100 கைத்தறிகளில், முதற்கட்டமாக 50 கைத்தறிகளும், இரண்டாம் கட்டமாக 50 கைத்தறிகளும் அமையவுள்ளன. 

இப்பூங்காவின் மூலமாக 125 நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும்,  300 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் ஆண்டொன்றுக்கு ரூ.9 கோடி அளவிற்கு விற்று முதலும், ஒரு நெசவாளருக்கு நாளொன்றுக்கு ரூ.550/- முதல் 900/- வரை கூலி கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 22.05.1971-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, 2022-2023-ஆம் ஆண்டில் ரூ.51.17 கோடி மதிப்பில் பட்டு சேலைகள் விற்பனை செய்து, விற்பனையில் முதல் இடமாக விளங்குகிறது. 10 சொந்த விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. சங்கத்திற்கு வள்ளல் பச்சையப்பன் சாலை, காஞ்சிபுரத்தில் சொந்தமாக காலி மனை 1997-ல் வாங்கப்பட்டது. இதன் பரப்பளவு 13,878 சதுர அடி இதில் விற்பனை வளாகம் கட்டப்பட்டு 2003–ல் திறந்து வைக்கப்பட்டது. 

விற்பனை குறைந்த காரணத்தால், 2019 முதல் செயல்படாமல் மூடப்பட்டு உள்ளது. இதனை புதுப்பித்து (Renovation) செய்து விற்பனை நிலையமாக செயல்பட 2020-21 ஆம் ஆண்டின் மாநில அரசின் Handloom Support Programme (HSP) திட்டத்தின் கீழ் ரூ.3.00 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 6,600 சதுர அடி பரப்பளவில்  முற்றிலும் குளிரூட்டப்பட்ட நவீன விற்பனை நிலையம், வாடிக்கையாளர் காத்திருக்கும் அறை, அலுவலகம், கீழ்தளம் வாகன நிறுத்தம், உணவகம் மற்றும் பிற வசதிகளுடன் புதிய விற்பனை வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஷோரூம் விற்பனை இலக்கு ரூ.25 கோடியாகும். அதன் மூலம் சங்கத்தின் மொத்த விற்பனை ரூ.75 கோடியாக உயரும்.

மேலும் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் 17.03.1957 முதல் செயல்பட்டு வருகிறது. 2022-23-ல் இதன் விற்பனை ரூ.15.66 கோடியாகும். 5 இடங்களில் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. சங்கத்திற்கு 1998-ல் 4,048 ச.அ  பரப்பளவில் சொந்தமாக கட்டிடம் வங்கப்பட்டது. 

இந்த கட்டிடம் பழுந்தடைந்த உள்ளதால் Handloom Support Programme (HSP) ரூ.65.00 லட்சம் ஒப்பளிப்பு செய்யப்பட்டு, தற்போது 1,845 ச.அ  ரூ.48.00 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரூ.17.00 இலட்சத்தில் ஷோரூம் உட்புற வேலைகள் மேற்கொள்ளப்பட்டு, ஷோரூம் விற்பனை இலக்கு ரூ. 10 கோடி நிர்ணயிக்கப்பட்டு, இதன் மூலம் சங்கத்தின் மொத்த விற்பனை ரூ.25 கோடியாக உயரும் என மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் துவக்கி வைத்து, பார்வையிட்டு,   ரூ.62.75 இலட்சம் மதிப்பில் 52 கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா தொழிற்கடன் உதவியும்,              15 நபர்களுக்கு மருத்துவ தொகுப்புகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப.,  கைத்தறித் துறை ஆணையர் திரு.கே.விவேகானந்தன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் திரு.குமரகுருநாதன், காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் தலைவர் திரு.ஏ.எஸ்.முத்துச்செல்வம், உதவி இயக்குநர்/ மேலாண்மை இயக்குநர் (முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்) திரு.வி. செந்தில்குமார், உதவி இயக்குநர்/துணை இயக்குநர் (மு.கூ.பொ) கைத்தறி துறை திரு.ஸ்ரீதரன், அரசு அலுவலர்கள், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments