காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்-அமைச்சர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம், பிப்.1:
பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரம் கச்சபேசுவரர் திருக்கோயில். இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 13.6.1954 மற்றும் 10.6.2005 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சிபுரம் செங்குந்த மகாஜன சங்கத்தினரால் ஆலயம் ரூ.3 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கின.
கோயில் அர்ச்சகர்கள் கே.வி.சுப்பிரமணிய குருக்கள்,இஷ்டசித்தி பிரபாகர குருக்கள் ஆகியோர் தலைமையில் 160 சிவாச்சாரியார்கள் 33 யாகசாலைகளில் பூஜைகளை நடத்தினார்கள்.
கோயில் ஓதுவார் தமிழ்ச்செல்வன் தலைமையில் சிறப்புத் திருமுறை பாராயணமும் நடைபெற்றது.
ஜன.29 ஆம் தேதி கோ.பூஜை,கஜபூஜையும் நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக பிப்.1 ஆம் தேதி காலையில் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று புனிதநீர்க்குடங்கள் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் மங்கள மேள வாத்தியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் போது மட்டும் லேசான மழைத்தூறல் விழுந்தது. பின்னர் மூலவருக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவின் தலைவர் எஸ்.பெருமாள், செயலாளர் கே.சுப்பராயன், பொருளாளர் எம்.சிற்றம்பலம், இணைச் செயலாளர் வி.ஜீவரெத்தினம், செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் எம்.சிவகுரு ஆகியோர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா,காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊராட்சிக்குழுவின் துணைத் தலைவர் நித்யாசுகுமார், கோயில் செயல் அலுவலர் எஸ்.நடராஜன், வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் ஆகியோர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு திருக்கல்யாண வைபவமும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.



No comments
Thank you for your comments