Breaking News

மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சரின் வாழ்த்து மடல்

காஞ்சிபுரம் 

2023-2024-ஆம் கல்வியாண்டில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறும் மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வாழ்த்துச் செய்தியினை வாழ்த்து மடலாக ஒவ்வொரு மாணவிகளுக்கும் அனுப்பிட ஏதுவாக மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு அனைத்து மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு 71 கல்லூரிகளில்  பயிலும் 2499 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்து வரும் பயனாளிகளுக்கு வாழ்த்துச் செய்தி வரப்பெற்றது.


அவ்வாழ்த்துச் செய்தியாவது:     

கல்லூரிப் படிப்பில்      காலடி    எடுத்து      வைத்திருக்கும்      நீங்கள்      ஒளிமிகுந்த எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த வாய்ப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்கள், பணிபுரியும் மகளிருக்குத் தங்கும் விடுதி, உறைவிடம் மற்றும் ஆதரவு தேவைப்படும் பெண்களுக்கு சேவை இல்லங்கள், பேருந்தில் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம் என மகளிருக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன் என்று வாக்களித்திருந்தேன். அதனடிப்படையில் கற்ற பெண்களால் மட்டுமே முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தை உருவாக்கிட இயலும் என்பதை செயல்படுத்தும் விதமாக என் உள்ளத்தில் உதித்த உன்னத திட்டமே "புதுமைப் பெண்" திட்டமாகும்.

பல்வேறு குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக உங்களின் உயர்கல்வி தடைபடக் கூடாது என்பதுடன், கல்விக் கட்டணம், போக்குவரத்து, நல்ல உணவு மற்றும் கல்லூரி படிப்பிற்கான அனைத்து தேவைகளுக்கும் துணைபுரியும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை உங்களது வங்கக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் ஏற்கனவே வேறு கல்வி உதவித்தொகையோ, பிற சலுகைகளோ பெறுபவராயினும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்பதே இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு உயர்கல்வி பயின்று வரும் நீங்கள் "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்” என்ற நிலையை உங்கள் பெற்றோருக்கும், உங்கள் தாயுமானவனான எனக்கும் தந்து பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். தாங்கள் பயன்பெற்று வருவதைப் போலவே தகுதியுடைய  உங்கள் தோழிகளையும் இத்திட்டத்தில் இணைந்து பயனடையச் செய்யுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வாழ்த்துச் செய்தி இடம்பெற்றுள்ளது.

எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதல் பெற்ற இவ்வாழ்த்து செய்தியினை மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் 24-01-2024  அன்று காலை 10:00 மணியளவில் பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரத்தில் பயின்றுவரும் 393 புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்நிகழ்வில் தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments