Breaking News

கேள்விகுறியாகும் ஊடக சுதந்திரம்... தொடரும் செய்தியாளர்கள் தாக்குதல் - என்.ஜே.யூ. தலைவர் டாக்டர் கா.குமார் கண்டனம்

சென்னை : 

வேலூர்  கோவிந்த ரெட்டிபாளையத்தில் அனுமதியின்றி நடைபெற்ற காளைவிடும் விழாவில் போட்டோ எடுத்துகொண்டிருந்த தினமலர் போட்டோகிராபரை சரமாரியாக தாக்கியும், கேமராவை உடைத்தும் அராஜக போக்கை கையாண்டுள்ளனர். இதுபோன்று செய்தியாளர்கள் தாக்குவது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார்  தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

செய்தியாளர் என்பவர் செய்திகளை சேகரிக்க  உரிமை உண்டு. ஒவ்வொரு செய்தியையும் சேகரிக்க செய்தியாளர் யாரிடமும் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை. 

கோவிந்த ரெட்டிபாளையத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட காளைவிடும் விழாவில் ஆக்ரோஷமாக ஓடிவந்த காளை ஒன்று, பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மீது பாய்ந்து, கொம்பால் குத்தியுள்ளது. இதனால் அவருக்கு ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இந்த காட்சிகளை தினமலர் போட்டோகிராபர் படம் பிடித்துள்ளார். 

இதைக் கண்டதும் அனுமதியின்றி விழா நடத்தும் பகுதியினர் சிலர் ஆத்திரம் அடைந்து, படம்பிடித்த போட்டோகிராபரிடம் இருந்த கேமராவை பறித்து உடைத்தனர். மேலும், மீறினால் உன்னை தொலைத்து விடுவோம் என்று மிரட்டியபடி, சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத போட்டோகிராபர் நிலைகுலைந்தார்.  

சிறிதுநேரம் கழித்து, விழாக்குழுவினர் பறித்துச்சென்ற கேமராவை, சக பத்திரிகையாளர்களுடன் சென்று தாக்கப்பட்ட போட்டோகிராபர் மீட்டார். அப்போது, அதில் அவர் படம்பிடித்திருந்த பல காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. மேலும், கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது. 

செய்தியாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது நடைபெற்றுவருகிறது. இதுபோன்ற செயல் ஜனநாயக படுகொலையாகும். 

உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சியின் குரல்வலையை நெரிக்கும் வகையில் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்களை சமூக விரோதிகள் தொடர்ந்து தாக்குவதும், அவர்களை அவதூறாக பேசுவதும், காவல் துறையினரால் கைது செய்யப்படுவதும் கண்டனத்துக்குரியதாகும்.

புகைப்பட கலைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு பிணையில் வெளிவர முடியாத சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழக அரசையும் காவல்துறையையும் நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் கோரிக்கை வைக்கிறது.

முன்பெல்லாம் செய்தித்தாளில் ஏதாவது ஒரு செய்தி, தகவல் பிடிக்கவில்லை என்றால் அது பற்றி ‘ஆசிரியருக்கு கடிதம்‘ பகுதிக்கு வாசகர்கள் கடிதம் எழுதி அனுப்புவார்கள். ஆனால் இப்போதோ இதழியல் துறை, செய்தியாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடிதங்களுக்குப் பதிலாக அரிவாள், கத்திகளும் செய்தியாளர்களைப் பதம் பார்க்கின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகின்றன என்பது குறித்து ‘எல்லைகள் இல்லாத நிருபர்கள்’ (ஆர்எஸ்எப்) அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பு 180 நாடுகளில் ஆய்வு நடத்தி வெளியிட்டபட்டியலில், சுமார் 75 சதவீத நாடுகளில் ஊடகங்களின் நிலைமை அபாய நிலையில் இருப்பதாக எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. எட்டு சதவீத நாடுகளில் மட்டுமே ஊடக சுதந்திரம் மேம்பட்ட நிலையில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று போற்றப்படும் நம் இந்தியா, ஆர்எஸ்எப் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ஒப்பிட்டால் 100 இடங்களுக்கு மேல் பின்தங்கியுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்த வரை போலீஸ், தீவிரவாதிகள், ஊழல் அரசியல்வாதிகள், ரவுடி கும்பல்களால் செய்தியாளர்கள் அதிகம் தாக்கப்படுவதாக ஆர்எஸ்எப் சுட்டிக் காட்டியுள்ளது.  செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பப்படுகின்றன. பாலியல், கொலை மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன.

ஒரு நாட்டில் சமுதாயமும், அரசியல் தலைமையும் மனம் வைத்தால் மட்டுமே ஊடக சுதந்திரம் காப்பாற்றப்படும்.

இவ்வாறு நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

No comments

Thank you for your comments