Breaking News

ராமானுஜருக்கு வேடன் திருக்கோலத்தில் காட்சியளித்த காஞ்சி வரதராஜசுவாமி

காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் உள்ள ராமானுஜருக்கு ஸ்ரீதேவி,பூதேவியுடன் உற்சவர் வரதராஜசுவாமி வேடன் திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அனுஷ்டானக்குளம் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் வரதராஜசுவாமி ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் சந்நிதிக்கு எழுந்தருளி அவருக்கு வேடன் திருக்கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி அனுஷ்டானக்குளம் உற்சவம் எனப்படுகிறது.

இந்நிகழ்வையொட்டி வரதராஜப் பெருமாள் ஆலயத்திலிருந்து கண்ணாடிப்பெட்டியில் அமர்ந்து செவிலிமேட்டில் உள்ள ராமானுஜர் சந்நிதிக்கு எழுந்தருளினார்.பின்னர் சந்நிதிக்கு அருகில் உள்ள சாலக்கிணற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து ராமானுஜர் திருக்கரங்களால் பெருமாளுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும்,அதன் தொடர்ச்சியாக பெருமாள் அணிந்திருந்த மாலை ராமானுஜருக்கு அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாலை சாற்றும் வைபவத்துக்கு பின்னர் பெருமாள் வேடன் திருக்கோலத்தில் ராமானுஜருக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் செவிலிமேடு எஸ்.மோகன் குடும்பத்தினரால் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் உள்ள தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி மரியாதை செய்வித்தலுக்குப் பிறகு கோயில் மாட வீதிகளில் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆலயத்தில் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள ராமானுஜர் வசித்த உடையவர் மாளிகைக்கு எழுந்தருளி மண்டபகப்படியில் சேவை சாதித்து மீண்டும் ஆலயம் வந்து சேர்ந்தார். விழாவில் ராமானுஜர் ஆலய அர்ச்சகர் சுரேஷ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜப் பெருமாளை தரிசித்தனர்.

 

No comments

Thank you for your comments