Breaking News

அதிமுகவை மீட்டெடுப்பதே எனது தர்மயுத்தம் - காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் பேச்சு

காஞ்சிபுரம்,  ஜன.4:

அதிமுகவை மீட்டெடுக்க தமிழகம் முழுவதும் மீட்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும்,மீட்டெடுப்பதே எனது தர்மயுத்தம் என்றும் காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வியாழக்கிழமை பேசினார்.


காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி கழக தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் அவரது அணியின் மாவட்ட செயலாளரான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம்,இணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.சி.டி.பிரபாகர்,கொள்கை பரப்பு செயலாளர் வி.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ரங்கநாதன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது :-

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது 16லட்சம் உறுப்பினர்களே இருந்தனர்.அதன்பிறகு ஜெயலலிதா கட்சியில் இருந்த போது 1.50 கோடி பேர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்து கட்சியை எக்குக்கோட்டையாகவும் மாற்றினார். 

தொண்டர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை கடந்த 1972 இல் எம்ஜிஆர்.உருவாக்கினார்.

அந்த விதிகளை மீறி எடப்பாடி கே.பழனிசாமி பொதுச் செயலாளராக ஆகியருக்கிறார். ரௌடிகளை வைத்துக்கொண்டு பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை தேர்வு செய்யப்பட்டார்.

எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்த காலத்திலிருந்து இதுவரை எந்த தேர்தலிலிலும் வெற்றி பெறவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் கூட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை. 

தோல்விக்காக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.இதன் மூலம் அதிமுக என்ற இயக்கம் சீர்குலைந்து வருவதை உணர முடிகிறது.முதல்வர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுத்தேன். 

என்னை மதிக்காமல் தரக்குறைவாக பேசுகிறார்.திமுகவுக்கு போய் விட்டேன் என்கிறார்.சசிகலா எடப்பாடியை முதல்வராக்கினார். அவரையும் தரக்குறைவாக பேசினார்.

எடப்பாடி ஆட்சிக்கு பிரதமர் மோடி பாதுகாப்பாக இருந்தார். இப்போது அவரையும் மதிக்காமல் அவருடன் கூட்டணி கிடையாது என்று பேசிவருகிறார்.

உயர்வதற்கு காரணமாக இருந்தவர்களை எப்போதும் மதிக்காத எடப்பாடியை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்,அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது தர்மயுத்தம்.இதற்காகவே தமிழகம் முழுவதும் மீட்புக் குழுக்களை நியமித்து வருகிறோம் என்றும் பேசினார்.

அதிமுகவை மீட்டெடுக்க ரூ.25லட்சம் நிதியுதவி :-

கூட்டத்தில் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் அதிமுகவை மீட்டெடுக்க ரூ.25லட்சம் வழங்குவதாக அறிவித்து காசோலையை ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கினார்.

இந்நிதி மீட்புக்குழுவுக்கு வந்துள்ள முதல் நிதி. கொடுத்தவர் ராசியானவர் என்பதால் தொடர்ந்து நிதி அதிகமாக வரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிதியை தொண்டர்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அவர் பேசினார்.

படவிளக்கம் : அதிமுகவை மீட்டெடுக்க ஓ.பன்னீர் செல்வத்திடம் ரூ.25லட்சத்துக்கான காசோலையை வழங்கும் அவரது அணியின் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார்

No comments

Thank you for your comments