காஞ்சி கச்சபேசுவரர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் - டிஐஜி ஆய்வு
காஞ்சிபுரம்,ஜன.31:
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.கும்பாபிஷேகத்தையொட்டி ஆலய வளாகத்தில் 33 யாகசாலைகள் அமைக்கப்பட்டு 160 சிவாச்சாரியார்கள் பங்கேற்று பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
புனித நீர்க்குடங்களை சிவாச்சாரியார்கள் ராஜகோபுரம்,மூலவர் கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லும் படிக்கட்டுகள் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா எனவும் மூலவரை பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் தரிசிக்க செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.ஆர்.பொன்னி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோயில் திருப்பணிக்குழுவிவின் தலைவர் எஸ்.பெருமாள், செயலாளர் கே.சுப்பராயன், காஞ்சிபுரம் செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் எம்.சிவகுரு, குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோர் ஆலயத்துக்கு டிஐஜி ஆர்.பொன்னியை அழைத்து சென்று ஆலயத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கும்பாபிஷேகம் நடைபெறும் விதங்கள், செய்யப்பட்டுள்ள திருப்பணிகள் குறித்து விளக்கிக் கூறினார்கள்.
ஆலயத்தை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை}கும்பாபிஷேகத்தையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அப்பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கச்சபேசுவரர் கோயிலைச் சுற்றியுள்ள 11 பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை விடுமுறையாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

No comments
Thank you for your comments