ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்- காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டி தொடக்கம்
மதுரை
தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு, மதுரையை மையப்படுத்தி தென் தமிழகம் பயனடையும் வகையில் ஒரு நிரந்த விளையாட்டரங்கம் கட்டப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
83,462 சதுர அடி பரப்பளவு
இதையடுத்து, அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, இங்கு இரவு, பகலாக பணிகள் நடைபெற்றன. ஏறத்தாழ 10 மாதங்களில் பணிகள் முழுமைப் பெற்று ரூ. 62.77 கோடியில், 83,462 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டது.
பிரம்மாண்ட பாா்வையாளா் மாடம்
5,000 போ் அமா்ந்து போட்டிகளைக் காணும் வகையில், பிரம்மாண்ட பாா்வையாளா் மாடம், ஜல்லிக்கட்டின் வரலாறு, பரிணாமம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம், காளைகளுக்கான காத்திருப்புக் கூடம், மாடுபிடி வீரா்களுக்கான ஓய்வு அறை, நூலகம், மருத்துவச் சிகிச்சை அறை என அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
3 கி.மீ. நீளத்துக்கு சாலை
தென் தமிழக மக்கள் அனைவரும் இங்கு வந்து செல்லும் வகையிலும், காளைகளை எளிதில் அழைத்து வந்து செல்லும் வகையிலும் ரூ. 28.5 கோடியில் 3 கி.மீ. நீளத்துக்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் திறந்துவைத்தார்
உலகின் முதல் பிரம்மாண்ட ஏறுதழுவுதல் அரங்கமாகக் குறிப்பிடப்படும் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து காலை 11.10 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது.
முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் ஆன்லைன் டோக்கன் எண் வரிசையின் அடிப்படையில் வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் சில நிமிடங்கள் போட்டியைக் கண்டு ரசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிகழ்வில் மாநில அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அலுவலா்கள் பங்கேற்றனர்.
மருத்துவ பரிசோதனை
500 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் களம் காண போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு. முன்பாகவே காளைகளுக்கும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பரிசு
இப்போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 1 மகேந்திரா தார் ஜீப் காரும், 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படுகிறது. 2வது பரிசு பெறும் காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு பைக் 50ஆயிரம் ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படுகிறது.
மேலும் போட்டியின்போது சிறப்பாக களம்காணும் மாடுபிடிவீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் அண்டா சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கபடவுள்ளது.
பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதி
5000 பேர் வரை போட்டியினை பார்வையிட ஏற்பாடுகள் உள்ள நிலையில். அதிகளவில் பார்வையாளர்கள் வருகை தரும்போது சுழற்சி முறையில் போட்டியை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. காளைகளுக்கு தீவனங்களும், ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
போலீஸ் பாதுகாப்பு
கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி தலைமையில், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன்உமேஷ் உட்பட 2200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments
Thank you for your comments