நியூஸ் 7 செய்தியாளர் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் - காவல்துறை அலட்சியத்தால் நேர்ந்த அவலம் - நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம்
சென்னை, ஜன. 25-
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யபட வேண்டும், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசாரிடம் பலமுறை தெரிவித்தும் அலட்சியமாக கண்டு கொள்ளாமல் மெத்தனப் போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் கண்டன தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. மக்களின் அடிப்படை பிரச்சினைகள், சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஆக்கப்பூர்வ செய்திகளை வெளிப்படுத்துவதில் துடிப்புடன் செயல்பட்டு வருபவர்.
![]() |
| டாக்டர் கா.குமார் |
- காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்
நேற்று முழுவதும் வழக்கம்போல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நேசபிரபுவை, கார் மற்றும் பைக்கில் வந்த மர்மநபர்கள் பின் தொடர்ந்து நோட்டம் விட்டுள்ளனர். மேலும் அவர் குறித்து, அவரது உறவினர்களிடமே விசாரித்தும் சென்றுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர் நேசபிரபு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.
காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உள்ளூர் காவல்நிலையமான காமன்நாயக்கன்பாளையம் போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேசபிரபுவை தொடர்பு கொண்ட காமன்நாயக்கன்பாளையம் போலீசார் புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
- அலட்சியமாக கையாண்ட காவல்துறை
அடுத்தடுத்து மர்ம நபர்கள் நேசபிரபுவை பின் தொடர, 4 மணிநேரத்திற்கும் மேலாக பாதுகாப்பு கேட்டு காவல்துறையினரிடம் நேசபிரபு கோரிக்கை வைத்தும், அதனை அலட்சியமாக கையாண்ட காவல்துறையினர், நேரில் வந்து புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர்.
இந்நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை அறிந்துகொண்ட நேசபிரபு இரவு 9 மணியளவில் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அங்கும் சிலர் இவரை நோட்டம் விட்டு பின்தொடர, வந்தவர்களின் வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினருக்கு விவரமாக எடுத்துக் கூறி பாதுகாப்பு கேட்டு நேசபிரபு கெஞ்சியுள்ளார்.
அப்படி காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே சுமார் 5 வாகனங்களில் வந்த மர்மகும்பல் நேசபிரபுவை சுற்றி வளைத்தது.ஒரு கட்டத்தில் நேசபிரபுவை மர்ம கும்பல் நெருங்கியபோது, அங்கிருந்து பதறி அடித்துக் கொண்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குள் ஓடியுள்ளார்.
- சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்
இருப்பினும் அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளது. இதில் நேசபிரபுவுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கால், மார்பு, தலை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது.
- காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவல்துறை மெத்தனப்போக்கால் செயல்பட்டதாலே இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் செய்தியாளரை தாக்குதலில் இருந்து காப்பாற்றி இருக்கலாம்.
தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசாரிடம் பலமுறை தெரிவித்தும் அலட்சியமாக கண்டுகொள்ளாமல் இருந்த போலீஸாரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது. மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளை கைது செய்க
மேலும், “நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
ஜனநாயக படுகொலை
கருத்துக்களையும், நிகழ்வுகளையும் வெளியிடும் செய்தியாளர்கள் தாக்கப்படுவதும், மிரட்டபடுவதும், போலி செய்தியாளர்கள் என முத்திரை குத்துவது போன்ற அவலநிலைகள் தொடர்கதையாக உள்ளன. செய்தியாளர்களை தாக்குவது என்பது ஜனநாயக படுகொலை ஆகும்.
செய்திதுறையை சேர்ந்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து தாக்கப்படுவதும், செய்தி சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பொய்வழக்கு புனைவதும் தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது..! இச்செயல் ஜனநாயக படுகொலையே..!
- பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்
செய்தியாளர்களை தாக்குவது நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகும். எனவே செய்தியாளர்களுக்கு செய்தி சுதந்திரம் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்.
- விரைவில் குணமடைய வேண்டும்
நேசபிரபு விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியத்தோடு பழையபடி பணிக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். நேசப்பிரபு மருத்துவ செலவுகள் முழுமையையும் அரசு ஏற்க வேண்டும். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அரசு உதவிட வேண்டும். அவர் முழுமையாக குணமடையும் வரை குடும்பத்திற்கு தேவையான செலவுகள், கல்வி மற்றும் மருத்துவ செலவுகளை அரசு முழுமையாக ஏற்று ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும்.
முற்றுகை போராட்டம்
“நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யபட வேண்டும், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசாரிடம் பலமுறை தெரிவித்தும் அலட்சியமாக கண்டு கொள்ளாமல் மெத்தனப் போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் "தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்".
செய்திதுறைக்கோ, செய்தி நிறுவனங்களுக்கோ, செய்தியாளர்களுக்கும் பிரச்சனை என்றால் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் என்றும் துணை நிற்கும், குரல் கொடுக்கும்.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



No comments
Thank you for your comments