Breaking News

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - காவல்துறை மெத்தனத்தால் நேர்ந்த அவலம்

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல்.


நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. மக்களின் அடிப்படை பிரச்னைகள் உள்ளிட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஆக்கப்பூர்வ செய்திகளை வெளிப்படுத்துவதில் துடிப்புடன் செயல்பட்டு வருபவர்.

நேற்று முழுவதும் வழக்கம்போல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நேசபிரபுவை, கார் மற்றும் பைக்கில் வந்த மர்மநபர்கள் பின் தொடர்ந்து நோட்டம் விட்டுள்ளனர். மேலும் அவர் குறித்து, அவரது உறவினர்களிடமே விசாரித்தும் சென்றுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர் நேசபிரபு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.


காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உள்ளூர் காவல்நிலையமான காமன்நாயக்கன்பாளையம் போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேசபிரபுவை தொடர்பு கொண்ட காமன்நாயக்கன்பாளையம் போலீசார் புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

அடுத்தடுத்து மர்ம நபர்கள் நேசபிரபுவை பின் தொடர, 4 மணிநேரத்திற்கும் மேலாக பாதுகாப்பு கேட்டு காவல்துறையினரிடம் நேசபிரபு கோரிக்கை வைத்தும், அதனை அலட்சியமாக கையாண்ட காவல்துறையினர், நேரில் வந்து புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை அறிந்துகொண்ட நேசபிரபு இரவு 9 மணியளவில் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அங்கும் சிலர் இவரை நோட்டம் விட்டு பின்தொடர, காவல்துறையினருக்கு வந்தவர்களின் வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை விவரமாக எடுத்துக் கூறி பாதுகாப்பு கேட்டு நேசபிரபு கெஞ்சியுள்ளார். அப்படி காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே சுமார் 5 வாகனங்களில் வந்த மர்மகும்பல் நேசபிரபுவை சுற்றி வளைத்தது.

ஒரு கட்டத்தில் நேசபிரபுவை மர்ம கும்பல் நெருங்கியபோது, அங்கிருந்து பதறி அடித்துக் கொண்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குள் ஓடியுள்ளார்.

 இருப்பினும் அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளது. இதில் நேசபிரபுவுக்கு இடது கை பலத்த சேதம் அடைந்தது. மேலும் கால், மார்பு, தலை உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்ந்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் காமநாயக்கன் பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த நேசபிரபுவை மீட்டு பல்லடம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கண்டனம் :

காவல்துறையின் அலட்சத்தியத்தால் இந்த கொலைவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற அவல நிலை செய்தியாளருந்து தொடர்ந்த வண்ணம் உள்ளது.  செய்தியாளர்களை மிரட்டுவது,  போலி செய்தியாளர்கள் என முத்திரை குத்துவது போன்ற அவலநிலைகள் தொடர்கதையாக உள்ளன.  செய்தியாளர்களை தாக்குவது என்பது ஜனநாயக படுகொலை ஆகும். 

நேசபிரபுவை தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும், தனக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசாரிடம் பலமுறை தெரிவித்தும் அலட்சியமாக கண்டுகொள்ளாமல் இருந்த போலீஸாரின் செயல் கண்டனத்துக்குரியது.

மேலும், அலட்சியப் போக்கு காட்டிய காவல்துறை அதிகாரிகள் மீது  துறைரீதியான விசாரனை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நேசபிரபு விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியத்தோடு பழையபடி பணிக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாகவும், நேசப்பிரபு மருத்துவ செலவுகள் முழுமையையும் அரசு ஏற்க வேண்டும் என்றும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அரசு உதவிட வேண்டும்   என்றும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் துணை நிற்கும் என்றும் தலைவர் டாக்டர் கா.குமார் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், செய்திதுறையை சேர்ந்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து தாக்கப்படுவதும், செய்தி சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பொய்வழக்கு புனைவதும் தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது..! இச்செயல் ஜனநாயக படுகொலையே..! 

செய்தியாளர்களை தாக்குவது நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகும். எனவே செய்தியாளர்களுக்கு செய்தி சுதந்திரம் பாதுகாப்பு சட்டத்தை  நிறைவேற்றி தர வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.

இதையம் படிக்க:   நியூஸ் 7 செய்தியாளர் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் - காவல்துறை அலட்சியத்தால் நேர்ந்த அவலம் - நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம்


No comments

Thank you for your comments