Breaking News

ஏழை ரசிகர்களுக்கும் நடிகர் அஜித் ஒரு படகு விட்டிருக்கலாம் - நடிகர் போஸ் வெங்கட் பரபரப்பு கருத்து

அமீர்கானுக்கு உதவியது போல, டிக்கெட் எடுத்துப் பார்க்கும் ஏழை ரசிகர்களுக்கும் நடிகர் அஜித் ஒரு போட் விட்டிருக்கலாம் என நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பாலிவுட் நடிகர் அமீர் கான் அவரது தாயார் சிகிச்சைக்காக சென்னையில் வந்து தங்கியிருந்தார். இந்த நிலையில் டிச.3,4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயலையொட்டி கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த வெள்ளத்தில் நடிகர் விஷ்ணு விஷால், பாலிவுட் நடிகர் அமீர்கான் சிக்கிக் கொண்டனர். தங்களைக் காப்பாற்றுமாறு நடிகர் விஷ்ணு விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் இருவரையும் மீட்பு படையினர் படகில் விரைந்து சென்று மீட்டுச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த நடிகர் அஜித், அமீர்கானை சந்தித்துப் பேசினார். அப்போது அவரது போக்குவரதுக்கு அஜித் உதவியதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அமீர்கான், அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், “பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் குணம் கொண்ட நடிகர் அஜித் எங்களைப் பார்க்க வந்தார். மேலும் எங்களது போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித்” என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமீர் கானுக்கு உதவியது போல அவரது ரசிகர்களுக்கு ஒரு போட்(படகு) விட்டு உதவியிருக்கலாம் என அஜித்தை நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் தாக்கி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குறித்து போஸ் வெங்கட் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

"வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும். (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு). ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களைப் பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்கலாம்)" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும்,கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


No comments

Thank you for your comments