Breaking News

ஆங்கிலப்புததாண்டு | காஞ்சி காமாட்சி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள்

காஞ்சிபுரம்,டிச.31:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பக்தர்கள் அம்மனை விரைவாக தரிசித்து செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

படவிளக்கம் : லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் (கோப்பு படம்)

இது குறித்து அவர் மேலும் கூறியது: -

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோயிலுக்கு ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பக்தர்கள் அதிக அளவில் அம்மனை தரிசிக்க வருவார்கள் என்பதால் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தரிசிக்க வரும் பக்தர்கள் கோயில் தெற்கு கோபுர வாசல் வழியாக வரிசையாக அனுமதிக்கப்பட்டு அம்மனை தரிசித்த பின்னர் வடக்கு கோபுர வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.வடக்கு கோபுர வாசல் பகுதியில் பக்தர்களுக்கு அன்னப் பிரசாதங்களும், நீர்,மோர் மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கோயிலில் கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் எதுவும் இல்லை.

அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தனுர்மாத பூஜை நிறைவு பெற்றதும் மதியம் 1.30 மணி வரை பக்தர்கள் அம்மனை தரிசிக்கலாம்.மதியம் நடை சாற்றப்பட்டு மீண்டும் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை ஆலயம் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

காஞ்சி சங்கர மடத்திலும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகமும், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் அம்மனை தரிசித்து இறையருள் பெற்றுச் செல்லுமாறும் ந.சுந்தரேச ஐயர் கேட்டுக்கொண்டார்.பேட்டியின் போது கோயில் மணியக்காரர் சூரியநாராயணனும் உடன் இருந்தார்.


No comments

Thank you for your comments