நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தால் தண்ணீருக்கு கோபம் வந்துவிடும் - அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை
காஞ்சிபரம், டிச.7-
அமைச்சர்கள் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரபாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
பேட்டி
பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.
ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 23.30 அடியாகவும், கொள்ளளவு 3459 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து 3167 கன அடியாக உள்ளது. ஏரியிலிருந்து 2500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உபரிநீர் கால்வாய் (6.20 கி.மீட்டர்) செல்லும் கிராமங்களான காவனூர், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்மேடு மற்றும் திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீர்நிலைகளில் குறுக்கீடு
மேலும் அவர் கூறும்போது, நீர் நிலைகளை ஆக்கிரமித்தோ, அல்லது நீர் வழிப்பாதைகளுக்கு குறுக்கீடு ஏற்படும் வகையிலோ வீடுகள் கட்டினால் தண்ணீருக்கு கோபம் வந்து அது வீட்டுக்குள் வருவதாக தெரிவித்தார். இதனால் எந்தக் காரணத்தை கொண்டும் நீர்வழிப்பாதையை குறுக்கிடும் வேலையை யாரும் செய்யக்கூடாது, என்றார்.
அதிகாரிகள்
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர்.முத்தைய்யா, நீர்வளத்துறை தலைமை பொறியாளர்அசோகன், உதவி ஆட்சியர் (பயிற்சி)க.சங்கீதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சி. பொதுபணிதிலகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.



No comments
Thank you for your comments