தமிழகத்தில் அரையாண்டு தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு - புதிய அட்டவணை வெளியீடு
சென்னை, டிச.11-
தமிழகத்தில் இன்று தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை, புதன்கிழமை (டிச.13) அன்று தொடங்க பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
பள்ளி தேர்வுகள்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
‘மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 4.12.2023 முதல் 9.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலினின் அறிவுரைகளின்படி, ‘மிக்ஜம்’ புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, வரும் 11.12.2023 (திங்கட்கிழமை) அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
7 அதிகாரிகள்
இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புத்தகம்-நோட்டு
இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க இன்று (திங்கள்கிழமை - 11.12.2023) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, (செவ்வாய்க்கிழமை- 12.12.2023) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
மேலும், ஏற்கெனவே, 11.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் இன்று திங்கள்கிழமை (11.12.2023) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய அட்டவணை வெளியீடு
இந்த நிலையில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 13 முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.
6 முதல் 10ம் வகுப்பு அட்டவணை
6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் 9, 10ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது.
13.12.2023-தமிழ்
14.12.2023-விருப்ப மொழி
15.12.2023 - ஆங்கிலம்
18.12.2023 - கணிதம்
20.12.2023 - அறிவியல்
21.12.2023 - உடற்கல்வி
22.12.2023-சமூக அறிவியல்
11 - 12ம் வகுப்பு அட்டவணை
அது போல் 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் புதிய தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகளும் டிசம்பர் 13 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது.
13.12.2023-மொழிப் பாடம்
14.12.2023-ஆங்கிலம்
15.12.2023 - கணினி அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
18.12.2023 - கணிதம், விலங்கியல், வர்த்தகம்
20.12.2023 - இயற்பியல், பொருளாதாரம்
21.12.2023- வேதியியல், அக்கவுண்டன்சி,
22.12.2023 - உயிரியல், தாவரவியல், வரலாறு
விடுமுறை
அந்த வகுப்புகளுக்கு டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதால் அரையாண்டு தேர்வு விடுமுறையும் தள்ளி வைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டது போல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை தேர்வுகள் முடிந்து, டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




No comments
Thank you for your comments