வேலூர் மாநகராட்சி பகுதியில் வரி ஏய்ப்பு - பரபரப்பு தகவல்கள்
வேலூர் :
வேலூர் மாநகராட்சி பகுதியில் வணிக கட்டிடங்களில் போதுமான “பார்க்கிங்”, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கட்டப்படுவது அதிகரித்து வருகிறது. மாநகராட்சி அனுமதித்த வரைபடம் அடிப்படையில் வணிக கட்டிடங்கள் பொதுவாக கட்டப்படுவதில்லை என்கிறார்கள். அனுமதி பெறுவதோ குறைந்த அளவு, ஆனால் கட்டிடம் கட்டுவதோ அதிக அளவு. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது. பெரு முதலாளிகளின் வரி ஏய்ப்பால் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும், இதன் எதிரொலியாக பொதுமக்கள் அடிப்படை தேவையான வீட்டின் மீதான சொத்து வரி உயர்ந்துள்ளது என்றும் பொதுமக்கள் குமுறுகின்றனர்.
வேலூர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஆதாரம் என்பது முக்கிய பங்காக உள்ளது.
சொத்துக்களை ஏலம் விடுதல், வாடகைகள், சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு வரி, உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மாநகராட்சிக்கு நிதி ஆதாரம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி திடக்கழிவு மேலாண்மை (SUC-Street Waste Management User Charges) கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் முறையாக கணக்கிடப்படுகிறதா? என்றால் மில்லியன் டாலர் கேள்விதான் என்கின்றனர்.
விதி மீறல்
கட்டப்படும் கட்டிடங்களில் வாகன நிறுத்துமிடம், கழிவறைகள், ஜன்னல்கள், வராண்டா, தீத்தடுப்பு சாதனங்கள், அவசர வழி இருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. ஆனால், அண்மைக்காலமாக கட்டப்படும் கட்டடங்கள் பல, இதுபோன்ற விதிகளை பின்பற்றாமலேயே கட்டப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
இதனால், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். நகர்ப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் சாலையின் இருபுறமும் நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விழாக் காலங்களில் வணிக வளாகங்களுக்கு வருவோர் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது.
நகர்ப் பகுதியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு அனுமதி கோரும்போது அனைத்து விதிகளையும் பின்பற்றுவதாகவே ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. ஆனால், பணிகள் மேற்கொள்ளும்போது பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவதில்லை எனத் தெரிகிறது.
வரி ஏய்ப்பு
மேலும் சில வணிக நிறுவனங்கள் பார்க்கிங் இடத்தை வணிக நிறுவனமாக பயன்படுத்துகின்றன. இதனால் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது.
குறிப்பாக சில மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் சுயலாபத்திற்காக, வரியை முறையாக கணக்கிடாமலும், மிக மிக குறைவான தொகைக்கு கணக்கீடு செய்து வரிவிதிப்பு செய்வதும், ஆய்வு செய்யாமல் சான்று அளிப்பது வாயிலாகவும் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வரி ஏய்ப்பால் நிதிச்சுமை
பெரு முதலாளிகளின் வரி ஏய்ப்பால் மாநகராட்சிக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படுகிறது. இதனால் மாநகராட்சி முழுவதும் வரி உயர்வு ஏற்பட்டது. எனவே அடிப்படை தேவையான வீட்டின் மீது சொத்து வரி உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
பொதுமக்கள் குமுறல்
இதுகுறித்து பொதுமக்களிடையே கருத்து கேட்டபோது பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளையும் மன குமுறல்களையும் நம்மிடம் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது,
மாநகராட்சி நிதி தேவைக்காக வரி உயர்வு என்று வீட்டு வரியை உயர்த்தி விட்டனர். ஆனால் நாங்களோ வீட்டு கடனே செலுத்த முடியாமல் திண்டாடுகிறோம். ஆனால் அதைவிட இந்த வீட்டு வரி எங்களை பாடாய் படுத்துகிறது.
அதுமட்டுமின்றி வீடு கட்ட அனுமதி என்று மாநகராட்சிக்கு சென்று அலையாய் அலைந்தது மட்டுமின்றி செலவாய் செலவழித்ததுதான் அதிகம்.
மனை அளவு அகலம் 15 அடி. இதில் இடது புறம், வலது புறம் என காலியாக இடம் விடவேண்டும் என்று அடுக்கடுக்காக விதிமுறைகள்.. இடப்புறம் வலப்புறம், கட்டிட சுவர் என அனைத்தும் போக வீட்டின் உள்புறம் அகலம் 8 அடியாக மிஞ்சியதுதான் மிச்சம். விதிகளை நாங்கள் பின்பற்ற வலியுறுத்தும் மாநகராட்சி, பெருநிறுவனங்களிடம் ஏன் விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்துவதில்லை என்ற கேள்வியையும் மன குமுறலையும் தெரிவித்தனர்.
அதுமட்டுமா அனுமதி பெறுவதற்காக செலவுமேல் செலவு செய்ததுதான் மிச்சம். அனுமதி பெறுவதற்கு, இடத்தை வந்து ஆய்வு செய்பவருக்கு, வரி விதிப்பாளர்களுக்கு என அனைவர்களுக்கும் காசுதான். ஒரு சிலரோ என் வார்டு கவுன்சிலர்களுக்கும் காசு கொடுத்தேன் என்று சொல்வதுதான் வேதனையாக உள்ளது என அப்பாவி பொதுமக்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை நம் முன் வைத்து குமுறுகின்றனர்.
வரி விதிப்பில்தான் இந்நிலை என்றால் வரி வசூலிப்பதிலும் நம் மாநகராட்சியின் செயல் அபாரம் என்றுதான் சொல்லவேண்டும்.
வரி பாக்கி
வேலூர் மாநகராட்சியில் வருவாய் துறை அலுவலர்கள் அலட்சியம் காரணமாக சொத்து வரி மட்டும் ரூ.40 கோடி வசூலிக்கப்படாமல் பாக்கியாக உள்ளது. தமிழக அளவில் வரி வசூலில் வேலூர் மாநகராட்சி 20 வது இடத்தில் பின்தங்க உள்ளது.
இதுகுறித்த விவரங்கள் வருமாறு:
-வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில், 15 வார்டுகள் வீதம் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மொத்த வருவாயில் 75 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்துக்கே சென்று விடுகிறது என்கிறார்கள். மாதா மாதம் வரிவசூல் செய்தால்தான் சம்பளம் கொடுக்க முடியும். இந்நிலையில் வரிவசூல் மந்தமாக உள்ளதால் நிரந்தர பணியாளர்கள் தவிர, தற்காலிக பணியாளர்களுக்கும் சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டே இந்தாண்டுக்கான வரிவசூல் மார்ச் மாதமே தொடங்கப்பட்டது. இந்தாண்டு மாநகராட்சிக்கு வரவேண்டி பாக்கி, 1-&வது மண்டலம் காட்பாடியில் சுமார் ரூ.11 கோடியும், 2&வது மண்டலம் சத்துவதச்சாரியில் சுமார் ரூ.12 கோடி யும், 3&வது மண்டலம் வேலூரில் சுமார் ரூ.8 கோடியும், 4&வது மண்டலம் சேண்பாக்கத்தில் சுமார் ரூ. 9 கோடி என மாநகராட்சிக்கு மொத்தமாக வரவேண்டிய தொகை சுமார் ரூ.40 கோடியாகும்.
இது வெறும் சொத்துவரி மட்டும்தான். ஆனால் வேலூர் மாநகராட்சியில் மொத்தம் நிலுவையில் உள்ள வரி தொகையை கேட்டால் தலைசுற்றும். அதாவது, Property tax , vacant land Tax, Professional tax, water charges , SUC charges, underground drainage charges என அனைத்திலும் உள்ள வரி நிலுவை(Arrear) தொகை ரூ.7120.10 லட்சம், நடப்பு வரி (Current) ரூ.4732.83 லட்சம் ஆக மொத்தம் (ஜிஷீtணீறீ)ரூ11,852.93 லட்சம் (ரூ118.5 கோடி) ஆகும்.
நிதி ஒதுக்க முடியாமல் தவிப்பு
வரி பாக்கி அதிகமாக உள்ளதால் வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமலும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பில் தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் ஜானகி இரவு பகல் பாராமல் வருவாய் அலுவலர்களை அழைத்து கூட்டம் நடத்தி வருகிறார்.
வரிவசூல் பணியில் தீவிரம்
மேலும் ஒவ்வொரு மண்டல அதிகாரிகளுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மந்தமாக செயல்பட்டு வந்த வருவாய் அலுவலர்கள். தீவிராமாக வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பெரியளவில் வருவாய் வரும் காட்பாடி, சத்துவாச்சாரியில் தீவிரமாக வசூலில் ஈடுபட்டாலே பாதி தொகை வசூலாகி விடும் எனவே மாநகராட்சி வருவாய் அலுவலர்கள் அதிரடியில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் வரிவசூலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கு தீர்வு கிடைக்கும்.
நடவடிக்கை பாயுமா?
இனியாவது வரி ஏய்ப்பாளர்கள் மீது, துணை போகும் அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், வேலூர் மாவட்ட நகர் ஊரமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
“வேலூர் மாநகராட்சியிலேயே 2&வது மண்டலத்தில்தான் வரி விதிப்பு கணக்கீடு முறைகேடாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது... இதுகுறித்து முழுதகவல்களுடன் விரைவில்..”
“நம்ம வேலூர்.. நம்ம கடமை..”

No comments
Thank you for your comments