Breaking News

வேலூர் மாவட்டத்திலிருந்து 6 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் - கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அனுப்பி வைத்தார்

வேலூர் : 

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் வேலூர் மாவட்டத்திலிருந்து இன்று (06-12-2023) ஒரு நாள் மட்டும்  ஆறு  வாகனகங்களில்  நிவாரணப்  பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ. குமாரவேல்  பாண்டியன், இ.ஆ.ப.,  அவர்கள் அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவரையின் பேரில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் வேலூர் மாவட்டத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று (06.12.2023) காலை  முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல்பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் ஆறு வாகனங்களில் உணவு மற்றும் அத்தியாவசியமான நிவாரண பொருட்களை ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து  அனுப்பி  வைத்தார்.

அதன் அடிப்படையில் இன்று காலை முதல் இதுவரை ஆறு  வாகனங்களில் வேலூர் மாவட்டத்திலிருந்து தன்னார்வலர்கள் ,தொண்டு நிறுவனங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் மூலம் பிரெட் பாக்கெட்டுகள்-5211, பன் வகைகள்-3726,  குடிநீர் பாட்டில்கள்-22,838, பிஸ்கட்டு பாக்கெட்டுகள்-24160, அரிசி 25 கிலோ மூட்டைகள்-31, அரிசி மூட்டைகள்-171, கோதுமை மாவு -83 கிலோ, பருப்பு வகைகள் -50 கிலோ,எண்ணெய் பாக்கெட்டுகள்-20  மற்றும் அத்தியாவசிய பொருட்களான  போர்வைகள்-2300, துண்டுகள்-1140, வாளி மற்றும் குவளைகள் -1500, குளியல் சோப்புகள்-706, துணி சோப்புகள் -565, பற்பசைகள்-203,பல்துலக்கிகள்-656,  பாய்கள்  மற்றும் படுக்கை விரிப்புகள்-725, பால்பவுடர்-5கிலோ, சேமியா பாக்கெட்டுகள் -100, மைதா -200கிலோ, நாப்கின்  2 பெட்டிகள்   தீப்பெட்டிகள் -1640, மெழுகுவர்த்தி -500, புடவைகள் -50, லூங்கிகள்-1200 ஆகிய  நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலூர் மாவட்ட நிர்வாகத்திலிருந்து சென்னை பகுதிகளில் மீட்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக வேலூர் மாநகராட்சியில் இருந்து 106,  பணியாளர்களும், ஊரக வளர்ச்சித் துறையிலிருந்து முதற்கட்டமாக 132 பணியாளர்களும்,  இரண்டாம் கட்டமாக 100 பணியாளர்களும்,  குடியாத்தம் நகராட்சியில் இருந்து 10 பணியாளர்களும்,  பேரணாம்பட்டு நகராட்சியில் இருந்து 17 பணியாளர்களும் என மொத்தம் 365  பணியாளர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பணியாளர்கள் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களுடன் சென்றுள்ளனர். குறிப்பாக தூய்மை பணிக்காக சுமார் 20 டன் அளவிலான ப்ளீச்சிங் பவுடர், சிறிய அளவிலான ஜெனரேட்டர்கள் 2,  மரம் அறுக்கும் அறுவை இயந்திரங்கள் 14,  தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதற்காக 7 பம்பு செட்டுகள் என தேவையான உபகரணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணித்து இவர்களின் பணியினை செவ்வனே மேற்கொள்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.தூய்மை பணி ஆய்வாளர்கள் அளவில் அலுவலர்களும் உடன் சென்றுள்ளனர். 

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேலும் நிவாரண பொருட்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது(பொ)திரு.அப்துல் முனிர், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கவிதா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது)திரு.பாலமுருகன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்)திருபழனி  மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர், 

No comments

Thank you for your comments