Breaking News

காஞ்சிபுரத்தில் இடியுடன் பலத்த மழை, மின்னல் தாக்கி விவசாயி சாவு

காஞ்சிபுரம், நவ.5:

காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் கரூர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.மதியத்திற்கு மேல் சுமார் 2 மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு, ஓரிக்கை, ஒலிமுகம்மது பேட்டை, விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு,மேட்டுத்தெரு, கீரைமண்டபம், மூங்கில் மண்டபம் ஆகிய பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்றது. 

அப்பகுதிகளின் வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களும் அவதிக்கு உள்ளாகினர். இவை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், குன்றத்தூர், செம்பரம் பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை (மி.மீ அளவில்) செம்பரம்பாக்கம் 17.40, , குன்றத்தூர் 31.80, ஸ்ரீபெரும்புதூர் 32.20, காஞ்சிபுரம் 57 என மழையளவு பதிவாகியுள்ளது. 

உத்தரமேரூரில் மழை பெய்ததாக எதுவும் பதிவாகவில்லை. இடியுடன் கூடிய பலத்த மழையின் போது காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரூர் அருகில் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தெட்சிணா மூர்த்தியின் மகன் முனுசாமி(57)என்பவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments