குமரகோட்டம் முருகன் கோயிலில் லட்சார்ச்சனை விழா
காஞ்சிபுரம், நவ.16:
முருகப்பெருமான் தமிழ்ப்புலவராக வந்து புலவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்த பெருமைக்குரியதும், கந்த புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்கும் உரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.இக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா இம்மாதம் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து முருகப்பெருமான் தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வருகிறார்.
கந்தசஷ்டி விழாவையொட்டி தினசரி காலையிலும்,மாலையிலும் லட்சார்ச்சனையும் நடந்து வருகிறது. விழாவின் 4 வது நாளாக நடைபெற்ற சிறப்பு லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவர்களது பெயர், நட்சத்திரம் ஆகியன கேட்டு கோயில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்ள் முழங்க சங்கல்பலம் செய்தனர்.
இதனையடுத்து வள்ளி,தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆறுமுகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைளும் நடைபெற்றன.
கந்தசஷ்டி விழா நடைபெறும் நாட்கள் முழுவதும் ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தை திரளான பக்தர்கள் 108 முறை வலம் வந்தும் முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.
செங்குந்த மரபினர் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சூரனை போன்று வேடமிட்டு வந்து முருகனும்,சூரனும் நேரடியாக போரிடும் காட்சிபோல சூரசம்ஹாரம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்தில் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் கோயில் பணியாளர்கள் மற்றும் கோயில் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவர குருக்கள் தலைமையில் அர்ச்சகர்களும் செய்து வருகின்றனர்.


No comments
Thank you for your comments