காஞ்சிபுரம் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம், நவ.24 :
காஞ்சிபுரம் வேணுகோபால சுவாமி திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டும்,புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டையும் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரியகாஞ்சிபுரம் ஒக்கப்பிறந்தான் குளம் புதுத்தெருவில் கடந்த 103 ஆண்டுகளாக வேணுகோபால சுவாமி பஜனைக் கோயில் இருந்து வந்தது. இக்கோயில் கும்பாபிஷகம் நடைபெற இருந்ததையொட்டி கோயிலுக்கு ராஜகோபுரம், மூலவர் விமானம் ஆகியன புதியதாக கட்டப்பட்டது.
மூலவர் வேணுகோபாலசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் சிலைகளும் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் காஞ்சிபுரம் எஸ்.தேவராஜ பட்டாச்சாரியார் தலைமையில் கடந்த 22 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கியது.
6 அடி உயர மூலவர் வேணுகோபால சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
2வது நாளாக வியாழக்கிழமை உக்த ஹோமமும்,சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலையில் யாகசாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் திருப்பணிக்குழுவின் தலைவர் கே.ராஜேந்திரன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில் ஆலயத்தின் ஸ்தபதிகள் ஆர்.நந்தகுமார், ஆர்.சசிக்குமார் ஆகியோர் உட்பட திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
படவிளக்கம் : காஞ்சிபுரம் வேணுகோபால சுவாமி கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்
ஆலயத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள மூலவர் வேணுகோபால சுவாமி சிலை
No comments
Thank you for your comments